25.4 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இந்தியா

திருப்பதியில் திருடப்பட்ட 2 வயது சிறுவன் மீட்பு: சென்னை தம்பதியிடம் ஒப்படைத்தது போலீஸ்

திருப்பதியில் திருடப்பட்ட சென்னை சிறுவன் சில மணி நேரங்களிலேயே பத்திரமாக மீட்கப்பட்டார். இது சிறுவனின் பெற்றோருக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது. சிறுவன் மீட்கப்பட்ட நிலையில், காவல் துறைக்கும், ஊடகங்களுக்கும் பெற்றோர் நன்றியைத் தெரிவித்தனர்.

சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த சந்திரசேகர் – மீனா தம்பதிக்கு 8 வயதில் மோகன் வசந்த், 2 வயதில் அருள் முருகன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், சந்திரசேகர் மனைவி மீனா மற்றும் குழந்தைகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பதி வந்தனர். சுவாமி தரிசனம் முடித்து கொண்டு நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை செல்ல திருப்பதி பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அசதியில் இரவு சென்னை செல்லும் பேருந்துகள் நிறுத்தம் அருகே படுத்து உறங்கினர். இந்நிலையில், அதிகாலை மீனா அருகே படுக்க வைக்கப்பட்டுருந்த  சிறுவன் அருள் முருகனை காணவில்லை. குழந்தை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மீனா – சந்திரசேகரன் தம்பதி பேருந்து நிலையத்தில் இருந்து புறக்காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து பேருந்து நிலைய சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் குழந்தையை எடுத்துச் செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளின் ஆதாரமாக திருப்பதி மாவட்ட எஸ்.பி பரமேஸ்வர் ரெட்டி உத்தரவின் பேரில் நான்கு தனிப்படைகள் அமைத்து மாவட்டம் முழுவதும் கேமரா காட்சிகளின் பதிவான மர்ம நபர் படம் மற்றும் குழந்தையின் புகைப்படங்கள் அனுப்பி போலீஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வைரலாகிய நிலையில் செய்தி ஊடகங்களிலும் வெளியானது.

இந்நிலையில், திருப்பதி அடுத்த ஏர்பேடு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் காணாமல் போன அதே குழந்தையை போலீஸாரிடம் ஒப்படைத்தார். போலீஸார் அந்தப் பெண்னிடம் விசாரித்ததில் தனது பெயர் தனம்மா என்றும், ஏர்பேடு மண்டலம் மாதவமாலா கிராமம் என்றும் இன்று காலை தனது தம்பி அவிலாலா சுதாகர் இந்தக் குழந்தையை வீட்டுக்குக் கொண்டு வந்ததாகவும் கூறினார். மேலும், யாருடைய குழந்தை என தான் கேட்டதற்கு தனக்கு குழந்தை இல்லை என்பதால் வளர்த்துக் கொள்ள திருப்பதி பஸ் ஸ்டாண்டில் இருந்து திருடி வந்ததாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், குழந்தை காணமல் போன பெற்றோர் அவதிப்படுவார்கள் ஏன் இப்படி செய்தாய் என கேட்டவுடன் குழந்தையை வீட்டில் விட்டு சென்று விட்டார். அதற்குள் குழந்தை காணமல் போனது செய்திகளில் மற்றும் சமூக வளைதளத்தில் வந்ததால் எங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவர் கரிமுல்லாவிற்கு தகவல் தெரிவித்தேன். அவர் ஏர்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கும்படி கூறினார். இதனையடுத்து குழந்தையை காவல் நிலையத்தில் கொண்டு வந்தேன் எனத் தெரிவித்தார். பின்னர் போலீஸார் திருப்பதி எஸ்.பிக்கு தகவல் தெரிவித்து குழந்தையை திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டு திருப்பதி எஸ்.பி. பரமேஸ்வர் முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து திருப்பதி எஸ் பி பரமேஸ்வர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ”சென்னையைச் சேர்ந்த தம்பதி சுவாமி தரிசனத்திற்காக வந்து பஸ் ஸ்டாண்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் குழந்தையை தூக்கி சென்றார். இது குறித்து உடனடியாக பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸாரும் துரிதமாக செயல்பட்டு சிறுவனின் புகைப்படம் மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகள் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி சமூக வலைதளங்களிலும் ஊடகங்களுக்கும் வழங்கப்பட்டது.

செய்திகள் அடிக்கடி ஒளிபரப்பான நிலையில் இதனை அறிந்த குழந்தையை தூக்கிச் சென்றவர் தனது சகோதரி வீட்டில் விட்டு சென்றுள்ளார். செய்தியில் வருவதைப் பார்த்து குழந்தையை தூக்கிச் சென்றவரின் சகோதரி தனம்மா பஞ்சாயத்து தலைவர் மூலம் போலீஸில் ஒப்படைத்தார். பெற்றோர்கள் எங்கு சென்றாலும் தங்களது கண்காணிப்பில் குழந்தைகளை வைத்துக் கொள்ள வேண்டும். இதுபோன்று குழந்தைகள் கடத்தப்பட்டாலோ, காணாமல் போனால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தால் போலீஸாரும் துரிதமாக செயல்பட்டு மீட்க முடியும். இந்தச் சம்வபத்தில் பெற்றோர்கள் உடனடியாக தகவல் தெரிவித்ததால் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது” என அவர் தெரிவித்தார்.

ஐந்தாண்டுகள் காத்திருந்து பிறந்த குழந்தை காணாமல் போன நிலையில் மீண்டும் போலீஸார் உதவியுடன் குழந்தை மீட்கப்பட்டது குறித்து பெற்றோர் நெகழ்ச்சி தெரிவித்தனர். இதற்கு உறுதுணையாக இருந்த காவல்துறையினர் மற்றும் ஊடகத்தினருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நெரிசலில் உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ‘புஷ்பா’ படக்குழு சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி

Pagetamil

“என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்வேன், செருப்பு அணிய மாட்டேன்!” – அண்ணாமலை கொந்தளிப்பு

Pagetamil

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல் சம்பவம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Pagetamil

3 கணவர்களிடமும் இயற்கைக்கு மாறான உறவு குற்றச்சாட்டு: பெண் கைது!

Pagetamil

12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய பெண்: 19 வயது இளைஞருடன் ஓட்டம்

Pagetamil

Leave a Comment