இராணுவ சொத்துக்கள் உட்பட வெளிநாட்டு கப்பல்கள் அல்லது விமானங்களின் வருகைக்கான புதிய நிலையான இயக்க நடைமுறைகளை அரசாங்கம் வெளியிட உள்ளது.
சீனக் கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில் தரித்து நிற்க விடுக்கும் அழைப்புகள் தொடர்பாக இந்தியாவிடமிருந்து வரும் கவலைகளைத் தீர்க்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக புதிய நிலையான இயக்க நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் கடல் எல்லைக்குள் அனுமதிக்கப்பட வேண்டிய கப்பல்களின் வகை பற்றிய வழிகாட்டுதல்கள் மற்றும் விவரங்களை உள்ளடக்கிய புதிய நிலையான இயக்க நடைமுறைகள் விரைவில் அதிகாரிகளால் முறையாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் கடல் பகுதியில் கப்பல்கள் எவ்வளவு காலம் இருக்க முடியும் மற்றும் அவை எந்த வகையான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பதையும் அந்த விதிமுறைகள் தெரிவிக்கும்.
கடந்த ஆண்டு சீனக் கப்பலான யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்பட்ட இராஜதந்திர பதட்டங்களின் பின்னணியில் இந்த புதிய முயற்சி பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.
மற்றொரு கப்பலான ஹை யாங் 24 ஹாவ் கடந்த மாதம் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் செய்தது.
இந்தியத் தரப்பின் மிகப்பெரிய கவலை என்னவென்றால், சீனக் கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பில் இருக்கும் போது இந்தியப் பாதுகாப்பு வசதிகளைக் குறிவைக்க தங்கள் உபகரணங்களைப் பயன்படுத்தலாம்.
இந்த மாதம் நியூயோர்க்கில் Carnegie Endowment ஏற்பாடு செய்த வருடாந்த இந்தோ-பசிபிக் தீவுகள் உரையாடலில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் புதிய நிலையான இயக்க நடைமுறைகளை பற்றி குறிப்பிட்டார்.
புதிய நிலையான இயக்க நடைமுறைகள் இலங்கை கடற்படையால் அமைக்கப்பட்ட முந்தைய நடைமுறைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதாகவும், இந்தியத் தரப்புடனான ஆலோசனைகளைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி விக்கிரமசிங்க, “சமீபத்தில், நாங்கள் இந்தியாவுடன் கலந்துரையாடினோம், இப்போது நாங்கள் அனைத்து திருத்தங்களையும் எடுத்துள்ளோம். எனவே, இப்போது வரும் எந்தக் கப்பல்களும் இந்தியாவுடன் இணைந்து நாங்கள் செய்த செயல்பாட்டு நடைமுறையின்படியே உள்ளன. அந்த இயக்க நடைமுறையின் மூலம் அச்சுறுத்தும் எந்த கப்பலும் வருவதை என்னால் பார்க்க முடியவில்லை.
சீன விஞ்ஞானக் கழகம் மற்றும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகமை (NARA) மற்றும் இலங்கையின் சில பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களின் அடிப்படையில் சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் மாத்திரமே நாட்டிற்கு வருகை தருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். கடந்த 10 வருடங்களாக இவ்வாறான கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளன.
இதற்கிடையில், கடலியல், கடல் புவியியல் மற்றும் கடல் சூழலியல் சோதனை ஆய்வுகளை மேற்கொள்ளும் 60 பேர் கொண்ட குழுவைக் கொண்ட கப்பல் என சீனாவின் அரச ஊடகம் வர்ணித்துள்ள மற்றொரு சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 இலங்கைக்கு திட்டமிடப்பட்ட பயணம் குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் கவலை தெரிவித்துள்ளன.
இந்த கப்பல் துறைமுகத்தில் தரிப்பதற்காக சீனா ஓகஸ்ட் மாதம் இலங்கையிடம் அனுமதி கோரியது, ஆனால் விஜயத்திற்கான திகதிகள் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
நாராவுடன் இணைந்து சோதனைகளை மேற்கொள்வதற்காக ஷி யான் 6 கப்பல் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.