தியாகி திலீபனின் நினைவுநாளை தடை செய்யக்கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிசார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தியாகி திலீபன் நினைவேந்தலை தடை செய்யக்கோரி யாழ்ப்பாணம் பொலிசார் தாக்கல் செய்திருந்த மனுவை, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் (20) தள்ளுபடி செய்திருந்தது.
இந்த நிலையில், நேற்று கொழும்பிலிருந்து சட்டமா அதிபர் திணைக்கத்தின் சிரேஸ்ட அரச சட்டவாதி சமிந்த விக்ரம , பொலிஸ் சட்டப்பிரிவு பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காளிங்க ஜெயசிங்க உள்ளிட்டவர்கள் உலங்கு வானூர்தியில் யாழ்ப்பாணம் வந்து, யாழ் பொலிஸ் நிலையத்தில் தீவிர மந்திராலோசனையில் ஈடுபட்டிருந்தனர்.
இதை தொடர்ந்து, திலீபன் நினைவை தடைசெய்யக்கோரி, யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதன்போது வவுனியா சம்பவ வீடியோக்களையும் காண்பித்திருந்தனர். (விரிவான செய்திக்கு- திலீபன் நினைவு வன்முறை வடிவமெடுக்கிறது: கொழும்பிலிருந்து வந்த பொலிஸ்குழு யாழ் நீதிமன்றத்தில் மீள மனுத்தாக்கல்!)
இது தொடர்பான கட்டளை இன்று பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் நேற்று அறிவித்திருந்தது.
இன்று, இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, பொலிசாரின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார். ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை மேற்கோளிட்டு, யாராவது வன்முறையில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்ய முடியுமென நீதிவான் சுட்டிக்காட்டினார்.