ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு விசாரணை தேவை என ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய நிரோஷன் பெரேரா, உண்மையை வெளிக்கொணர உள்நாட்டுப் பொறிமுறை போதிய முயற்சிகளை மேற்கொள்ளாததால் வெளிநாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டிய தேவை உள்ளது என்றார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஒரு அரசியல் சதி என்று குற்றம் சாட்டப்பட்டு உள்நாட்டில் பல விசாரணைகள் நடத்தப்பட்டும் எந்த முடிவும் கிடைக்கவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.
கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள காணொளியில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.
நான்கு வருடங்களுக்கு மேலாகியும், ஈஸ்டர் தாக்குதலுக்கு நேரடியாகப் பொறுப்பான தரப்பினரை அடையாளம் காணவும், தாக்குதலின் நோக்கத்தை வெளிப்படுத்தவும் அரசாங்கம் தவறிவிட்டதாக சுட்டிக்காட்டினார்.
தொடர் தாக்குதல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட பாதுகாப்புப் படைகளில் தொடர்ந்தும் பதவியில் இருப்பவர்கள் தற்காலிகமாக பதவியில் இருந்து நீக்கப்பட்டு பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென நிரோஷன் பெரேரா மேலும் தெரிவித்தார்.