தன் மகள் மீரா மறைவு குறித்து இசையமைப்பாளரும், நடிகருமான நடிகர் விஜய் ஆண்டனி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “அன்புள்ள நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த சாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஓர் அமைதியான இடத்துக்குத்தான் சென்றிருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள். உங்கள் விஜய் ஆண்டனி” என்று பதிவிட்டுள்ளார்.
திரைத்துறையில் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட விஜய் ஆண்டனி குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள். இதில், மூத்த மகள் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அவர் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். தகவல் அறிந்து தேனாம்பேட்டை காவல் நிலைய போலீஸார் மருத்துவமனைக்கு விரைந்து, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு காலை 6.10 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். இறுதி அஞ்சலிக்குப் பின்பு சிறுமியின் உடல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
— vijayantony (@vijayantony) September 21, 2023