90 நாள் தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்டு வரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவருமான கணேமுல்ல சஞ்சீவ என்பவரின் 28 தோட்டாக்களுடன் கூடிய T56 துப்பாக்கி மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
அங்கொட பரக்கும் மாவத்தையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி மீட்கப்பட்டது.
மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவின் பொலிஸ் குழு நேற்று காலை சம்பவ இடத்திற்கு வந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கண்டெடுத்துள்ளது.
இவை பயணப் பையில் வைக்கப்பட்டு பாதுகாப்பாக அடைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற பல கொலைகளுக்கு இந்த துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதுதெரியவந்துள்ளதாகவும், அதனை உறுதிப்படுத்தும் வகையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் கணேமுல்ல சஞ்சீவ இதுவரை நடத்திய 18 கொலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கணேமுல்ல சஞ்சீவ நேபாளத்திலிருந்து இலங்கை வரும் போது, தனது கையடக்க தொலைபேசியை விமானத்துக்குள்ளேயே விட்டுள்ளார். அந்த தொலைபேசியும் மீட்கப்பட்டு, குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள தரவுகள் அழிக்கப்பட்டுள்ளதால், அவற்றை மீட்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
சஞ்சீவ தற்போது மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அரசியல் தொடர்புகளை கொண்ட ஒருவர் மற்றும் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த அரசியல்வாதி ஒருவரிடமும் அவருக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சஞ்சீவ அரசியல்வாதிக்கு சில வேலைகளை செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதால், அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.