தனித்து வாழ்ந்த பெண்மணியொருவர் மயக்கமடைந்து காணப்பட்டதையடுத்து, அவசர நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பு விடுக்க முயன்றனர் உறவினர்கள்.
எனினும், அந்த பகுதியிலுள்ள தாதியொருவர் பரிசோதித்த பின்னரே, அந்த பெண்மணி போதையில் மயங்கியிருக்கும் விடயம் வெளிப்பட்டுள்ளது.
நேற்று (16) சனிக்கிழமை, வடமராட்சி பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பிரித்தானியாவில் 3 பிள்ளைகள் வசித்து வரும் நிலையில், தாயார் வடமராட்சி பகுதியில் தனித்து வாழ்ந்து வருகிறார். அவரது 3 பிள்ளைகளும் கடந்த மாதம் விடுமுறையில் ஊருக்கு வந்து போயிருந்தனர்.
அந்த பெண்ணிற்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து தினமும் உணவு கொண்டு வரப்படுவது வழக்கம்.நேற்று, பெண்ணொருவர் உணவு எடுத்துக் கொண்டு அந்த வீட்டுக்கு சென்றுள்ளார்.அவர் சென்றபோது, வீட்டு கதவு திறந்து காணப்பட்டுள்ளது. எனினும், பெண்ணின் நடமாட்டம் இருக்கவில்லை.
வீட்டின் உள்பகுதியில், பெண்மணி தரையில் விழுந்து காணப்பட்டார். அவர் பேச்சின்றி இருந்ததால், சத்தமிட்டு அயலவர்களை அழைத்துள்ளார்.
அயலவர்கள் அங்கு வந்து பார்த்து விட்டு, அந்த பெண் உயிராபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்து, நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பு விடுக்க தீர்மானித்தனர்.
எனினும் அங்கிருந்த யாருக்கும் எந்த இலக்கத்திற்கு அழைபேற்படுத்தி தகவல் வழங்குவதென தெரிந்திருக்கவில்லை. அந்த வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர்கள் தொலைவில் வசித்து வந்த தாதியொருவருக்கு தகவல் வழங்கியுள்ளனர்
தாதி அங்கு வந்து பரிசோதித்த பின்னர், அவரது உடல் நிலை சீராக இருப்பதாக குறிப்பிட்டு, அவர் மது அருந்தியிருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து,மயக்கமடைந்திருந்த பெண்ணின் சகோதரியின் மகள், வீட்டுக்குள் சோதனையிட்ட போது, அறையொன்றுக்குள் மதுபான போத்தல் திறந்த நிலையிலும், அருகில் கப் ஒன்றும் காணப்பட்டுள்ளது.
மதுபானம் அருந்தி விட்டு, அந்த பெண் போதையில் விழுந்திருப்பது தெரிய வந்தது.
அந்த பெண்ணின் மூத்த மகன், தனது மனைவியின் தந்தைக்கு கொடுப்பதற்காக வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்த மதுபான போத்தலொன்று, கொடுக்கப்படாமல் அந்த வீட்டிலேயே இருந்ததும், வீட்டு பெண்மணி அதை அருந்தியுள்ளதும் பின்னர் தெரிய வந்தது.