25.5 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இந்தியா

ராஜீவ் கொலை வழக்கு: ‘இலங்கை பாஸ்போர்ட் வழங்கியதும் முருகனை அந்த நாட்டுக்கே அனுப்புவோம்’!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான முருகன் உள்ளிட்ட நான்கு பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் இருந்த நளினி, முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

இலங்கை குடிமகனான முருகன் தற்போது திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தனது கணவரை அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கக் கோரி, முருகனின் மனைவி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தபோது, லண்டனில் வசிக்கும் மகளுடன் சேர்ந்து வாழ கணவர் முருகன் விரும்புவதாகவும், பாஸ்போர்ட் பெறுவது தொடர்பாக அவர் இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டியுள்ளதாகவும் நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அகதிகள் முகாமில் உள்ள அவரால் அங்கிருந்து வெளியே வர முடியவில்லை எனவும், திருவான்மியூரில் வசிக்கும் தன்னுடன் சேர்ந்து வாழ வகை செய்யும் வகையில் முருகனை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கில் மத்திய அரசின் அயல்நாட்டினர் பதிவு மண்டல அலுவலக அதிகாரி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், விதிகளின்படி, தமிழக சிறையில் இருந்து விடுதலையாகும் வெளிநாட்டினர்களிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில், அவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவர்.

ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான முருகன் உள்ளிட்ட நான்கு இலங்கை தமிழர்கள், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல், கள்ளத் தோணி மூலமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே அவர்கள் தற்போது அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர்களுக்கான பாஸ்போர்ட் மற்றும் பயண ஆவணங்கள் கேட்டு கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடைய பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் இவர்கள் நான்கு பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சூப்பர் ஸ்டாருக்கு 300 கிலோ எடையில் மூன்றரை அடி உயர கருங்கல் சிலை

east pagetamil

சென்னை விமான நிலையத்தில் ஒரேநாளில் 13 விமானங்கள் ரத்தானதால் பயணிகள் அவதி

Pagetamil

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்

Pagetamil

“மன்னிக்கவும்… நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை!” – விஜய் பேச்சுக்கு உதயநிதி ரியாக்‌ஷன்

Pagetamil

“ஆட்சியாளர்களின் கூட்டணி கணக்குகள் 2026 தேர்தலில் எடுபடாது” – திமுக மீது விஜய் கடும் தாக்கு

Pagetamil

Leave a Comment