ரஜினிகாந்த் ஏன் திருடர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என ஆந்திர அமைச்சர் ரோஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து, அவரது மகனுக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறிய நிலையில் அவரது நிலைப்பாட்டை விமர்சித்துள்ளார் அமைச்சர் ரோஜா.
ஆந்திராவில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார். இவரது பதவிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக மாநில குற்றப் புலனாய்வு துறை கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி அதிகாலை 3.30 மணி அளவில் அவரை போலீசார் கைது செய்தனர்.
சந்திரபாபு நாயுடு விசாரணைக்காக விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதன் காரணமாக ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் உடனடியாக போராட்டத்தில் குதித்தனர். மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்தையும் அக்கட்சியினர் நடத்தினர். பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திராபாபு நாயுடுவை சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். அவருக்கு செப்டம்பர் 22 ஆம் திகதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.
சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட தகவலறிந்த நடிகர் ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷிடம் தொலைபேசியில் பேசினார். “என்னுடைய நண்பர் (சந்திரபாபு நாயுடு) எந்தத் தவறையும் செய்திருக்கமாட்டார். பொய் வழக்குகள் அவரை எதுவும் செய்யாது. அவரது தன்னலமற்ற பொது சேவை அவரை நிச்சயமாக வெளியே கொண்டு வரும். தவறு செய்யாத உங்கள் தந்தை விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார்.” என ஆறுதல் கூறியதாக தகவல் வெளியானது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரும், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான நடிகை ரோஜா, “ரஜினி ஒரு புத்திசாலி. ஆனால், திருடர்களுக்கு ஏன் ரஜினிகாந்த் ஆறுதல் கூறுகிறார்? அவர் மீது இருந்த மரியாதை போய் விட்டது. மக்களுக்காக போராடி சிறை சென்றவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தால் அனைவரும் நல்ல விதமாகப் பேசுவார்கள். ஆனால், மக்களின் பணத்தை திருடியவர்களுக்கு ஆறுதல் கூறினால் என்ன அர்த்தம்? இதன் மூலம் மக்களுக்கு அவர் என்ன செய்தி சொல்ல வருகிறார்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களுக்கு நல்லது செய்ய வாய்ப்பிருந்தும் ரஜினி ஏன் அரசியலுக்கு வரவில்லலை? என்.டி.ஆர் நூற்றாண்டு விழாவில் சந்திரபாபு நாயுடு குறித்து ரஜினி பேசியதற்கு எவ்வளவு எதிர்ப்பு கிளம்பியது என்பது அனைவருக்கும் தெரியும். சந்திரபாபு நாயுடு நல்லவர் என யாரும் நம்ப மாட்டார்கள். தவறு செய்தவர்களுக்கு தாமதமானாலும் தண்டனை கிடைக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.