30.5 C
Jaffna
April 13, 2025
Pagetamil
இலங்கை

8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: ‘என்னை பலிக்கடாவாக்க முயல்கிறார்கள்’… தாதியின் தன்னிலை விளக்கம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாண்டில்யன் வைசாலி என்ற 8 வயதுப் பெண் குழந்தையின் கை அகற்றப்பட்டமை தொடர்பில், குறித்த விடுதியில் பணியாற்றிய தாதிய உத்தியோகத்தர் தன்னிலை விளக்கமளித்துள்ளார்.

இதுவரை ஒரு தரப்பு கருத்துக்கள் மட்டுமே வெளியாகியிருந்த நிலையில், இந்த விவகாரத்தின் பரந்த சிக்கலுக்குரிய பகுதியை வெளிச்சமிடுகிறது தாதியின் தன்னிலை விளக்கம்.

அவரது விளக்கம் வருமாறு-

ஜனனி ரமேஸ் ஆகிய நான் கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து இற்றை வரை ஏறக்குறைய 12 வருடங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமை புரிந்து வருகின்றேன். குறித்த சிறு பிள்ளைகளுக்குரிய 12 ஆம் விடுதியில் ஏறக்குறைய 6 வருடங்களாகப் பணி புரிந்து வருகின்றேன்.

இதுவரை காலமும் என் மீதோ எனது சேவை மீதோ எந்தவொரு குற்றச்சாட்டும் யாராலும் முன்வைக்கப்பட்டதில்லையென்பதை உறுதிப்படுத்திக் கூறுகின்றேன். அது மட்டுமின்றி தற்போது என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டும் உண்மையல்லவென்பதும் குறித்த குழந்தையின் கை அகற்றப்பட்டமைக்கு நான் எவ்விதத்திலும் பொறுப்பாக மாட்டேன் என்பதையும் முதற்கண் மீண்டும் உறுதிப்படுத்திக் கூறுகின்றேன்.

சமூக வலைத்தளங்களும் உண்மையை வெளிக்கொணர வேண்டிய ஊடகங்களும் ஆதாரங்கள் எதுவுமின்றி என் தரப்பு நியாயங்கள் எதுவும் கேட்கப்படாமல் என் புகைப் படங்களைப் பதிவிட்டு என் நடத்தையைத் தவறாகச் சித்தரித்து என் மீது குற்றம் முழுவதையும் சுமத்தி என்னை வெளியே நடமாட முடியாதபடியும் எனது நாளாந்தக் கடமைகளைச் செய்ய முடியாதபடியும் என்னை மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்கள்.

சமூக வலைத்தளங்களில் அதனை மறுத்து என் தரப்பு நியாயத்தை பதிவிடும் மனத் தைரியத்தை நான் இழந்துள்ளேன். மரணத்தை விஞ்சிய அவமானத்தை எனக்கும் என் குடும்பத்தவருக்கும் குறித்த சமூக வலைத்தளங்களும் ஊடகங்களும் ஏற்படுத்தியுள்ளன . என்னைக் கொலைகாரியாகச் சித்தரித்துள்ளன.

உண்மையில் குறித்த பெண் குழந்தை 12 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்ட போது நான் கடமையில் இருக்கவில்லை. ஆனால் குறித்த பெண் குழந்தை சாதாரண காய்ச்சலால் அன்றி கடுமையான தோல் தொற்று நோயால் ( Staphy lococcal scalded skin syn drome ) பாதிக்கப்பட்டு 12 ஆம் விடுதியில் உள்ள தனிமைப்படுத்தல் அறையில் அனுமதிக்கப் பட்டிருந்ததை எனது சக தாதிய உத்தியோகத்தர்கள் மூலம் நான் அறிந்து கொண்டதன் படி, குறித்த குழந்தை இரு கைகளிலும் கனுலா ஏற்றப்பட்ட நிலையில் நொதேண் தனியார் வைத்தியசாலையிலிருந்து 25.08.2023 ஆம் திகதியன்று இரவு 9.45 மணிக்கு எமது விடுதியில் இரவோடு இரவாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அனுமதிக்கப்பட்ட போதே இரு கைகளில் மட்டுமன்றி அவரின் கால்களிலும் வீக்கம் வெளிப்படையாகத் தெரியும் வண்ணம் இருந்ததாக எனது சக உத்தியோகத்தர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது .

கடந்த 25 ஆம் திகதி குறித்த தனியார் வைத்தியசாலையினால் பொருத்தப்பட்டிருந்த கனுலாக்கள் ஊடாகவே குறித்த குழந்தைக்கு  Vancomycin மற்றும் Augmantin ஆகிய மருந்துகள் ஏற்றப்பட்டிருந்தன. மறுநாளிலிருந்து வைத்திய நிபுணரின் ஆலோசனைப்படி குறித்த Vancomycin நிறுத்தப்பட்டு clindamycin மருந்து ஏற்றப்பட்டிருந்தது. 26 ஆம் திகதி நான் காலை மற்றும் மாலை கடமைகளில் இருந்த போதும் குறித்த குழந்தைக்கு ஊசி மருந்து ஏற்றும் செயலைச் செய்வதற்கு சந்தர்ப்பம் நேர்ந்திருக்கவில்லை .

குறித்த குழந்தை அதனது நோய்த்தன்மையின் காரணமாக தாதியரோ, வைத்தியரோ அருகில் சென்றால் அழும் இயல்பைக் கொண்டிருந்தது. 26 ஆம் திகதி இரவு புதிய கனுலாவொன்று குழந்தையின் இடது மணிக்கட்டின் உட்புறத்தில் வேறொரு தாதிய உத்தியோகத்தரால், பொருத்தப் பட்டிருந்தது. அந்த கனுலாவூடாகவே தொடர்ந்தும் மருந்துகள் ஏற்றப்பட்டிருந்தன. 27 ஆம் திகதி இரவுக் கடமையை ஏனைய இரண்டு தாதிய உத்தியோகத்தர்களுடன் சேர்த்து நான் பொறுப்பேற்றிருந்தேன். இரவு 10.45 மணியளவில் குறித்த குழந்தைக்கு ஊசி மருந்து ஏற்றுவதற்காக நான் குறித்த குழந்தையின் அறைக்குச் சென்ற போது குழந்தையும் தாயும் உறங்கிக் கொண்டிருந்தனர். நான் குறித்த அறையில் மின்குமிழை ஒளிரவிட்டு ஊசி போட வேண்டும் அம்மா எனக் கூறி விட்டு, குழந்தையின் கையைப் தொட்ட போது, குழந்தை எனது தாதிய உடையைப் பார்த்தும் ஊசி என்ற வார்த்தையைக் கேட்டும் அழத் தொடங்கியது.

அந்நேரம் சேலைன் நிறுத்தப்பட்டிருந்தது. நான் பிள்ளையின் இடது, வலது கைகள் மற்றும் கால் வீக்கமாயிருப்பதை அவதானித்து பிள்ளையின் தாயாரிடம் “நீங்கள் வரும்போது வீக்கம் இருந்ததா“ என மூன்று தடவை வினவியிருந்த நிலையில், தாயார் முதலே கைகள், கால்களில் வீக்கம் இருந்ததென்றும் வீக்கத்தோடேயே கனுலா போடப்பட்டதாகவும் எனக்குத் தெளிவாகப் பதிலளித்திருந்தார்.

அதன் பின்னர் குழந்தையின் இடது கை மணிக்கட்டின் உட்புறத்தைத் திருப்பிப் பார்த்த போது, அதில் வீக்கம் எதுவும் தென்பட்டிருக்கவில்லை .

கனுலா outline ஆக இருந்தால் மணிக்கட்டின் உட்புறத்தில் வீக்கம் அல்லது கட்டி ஏதாவது தோன்றும் என்பது எனது அனுபவத்தில் நான் கண்டதுண்டு. அத்தகைய அடையாளம் எதுவும் காணப்படாமையால் நான் முதலில் ஏற்ற வேண்டிய Augmantine மருந்தை ஏற்றி விட்டு 1Cur saline water இல் கலந்து dilute செய்து நான் எடுத்து வைத்திருந்த foc clind amycin மருந்தை குறித்த நேர இடைவெளியில் மிகவும் மெதுவாக கனுலாவூடாக உட்செலுத்தினேன் .

குறித்த clindamycin மருந்தை நான் அதன் செறிவைக் குறைக்கும் வகையில் சேலைன் நீருடன் கலந்து ஏற்றவில்லை. நேரடியாகவே ஏற்றியதாக என் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. குறித்த clindamycin மருந்தினை இதற்கு முன்னர் பல தடவைகள் பல சிறுவர்களுக்கு ஏற்றிய அனுபவம் எனக்கு உண்டு. அதனை சேலைன் நீருடன் சேர்த்து மெதுவாக ஏற்ற வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும் . கனுலாவூடாக சிறிஞ்சில் குறித்த விகிதாசாரத்தில் கலந்தே நான் ஏற்றியிருந்தேன். அவ்விதம் நாம் ஏற்றுவது எமது வைத்தியசாலையில் வழமையே ஆனால் இப்பிரச்சினையின் பின்னர் அனைவரும் என் மீது குற்றம் சுமத்தும் நோக்கில் அவ்விதமான வழமையை மறுக்கின்றார்கள்.

குறித்த மருந்து ஏற்றியவுடன் பிள்ளை கை நோவதாகக் கூறிய போது, குறித்த மருந்து எரியும் இயல்புடைய மருந்தென்பதை தாயாருக்கு கூறி, சேலைன் 50 ml ஏறும் வகையில் குறித்த சேலைன் லைனை போட்டு விட்டால் எரிச்சல் குறையும் என கூறியபோது, வேண்டாம் என பிள்ளை அழுதுகொண்டே மறுத்து விட்டது. அதன் பின்னர் நான் திரும்பி வந்து கைகழுவிக் கொண்டு நின்ற வேளையில் பிள்ளையின் தாயார் மீண்டும் ஒரு தடவை வந்து பிள்ளை கை நோவால் அழுவதாகக் கூறியிருந்தார்.

அதன்போது நானும் எனது சக தாதிய உத்தியோகத்தரும் சென்று குறித்த 50 ml சேலைன் ஏறும் வகையில் லைனைப் பொருத்தியிருந்தோம். பிள்ளையின் அருகில் சென்ற சந்தர்ப்பங்களில் குறித்த கனுலா தவறாகப் போடப்பட்டிருப்பதற்குரிய அறிகுறிகளோ . அசாதாரணமான வீக்கங்களோ எதுவும் என்னால் அவதானிக்கப்படவில்லை. கையில் இருந்த வீக்கம் ஏற்கனவே இருந்ததாகத் தாயார் கூறியிருந் தார். அதன் பின்னர் எமக்கு எதுவித முறைப்பாடும் பிள்ளையின் தாயாரால் கிடைக்கப்பெறவில்லை. இதன் பின்னர் மற்றோர் தாதிய உத்தியோகத்தர் இரவு 1 மணி மற்றும் 2 மணிக்கு குறித்த பிள்ளையைப் பார்வையிட்ட நேரத்தில் தாயாரும் பிள்ளையும் உறக்கத்தில் இருந்ததாகவே தெரிவித்திருந்தார் .

பின்னர் மறுநாள் காலை 5.45 மணியளவில் HO ஒருவர் பிள்ளையை பார்வையிட்டு கணுலாவை கழற்றி மறுகையில் ஏற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். குறித்த கனுலா கழற்றப்பட்டு வலது கையில் ஏற்றப்பட்டு அதனூடாகவும் மருந்து ஏற்றப்பட்டது. அதன் பின்னரே பிள்ளையின் இடது கையில் அசாதாரண வீக்கம் அவதானிக்கப்பட்டதும் வைத்திய நிபுணருடன் தொடர்பு கொண்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டது.
இதில் என் மீது வைக்கப்பட்ட மற்றைய குற்றச்சாட்டானது தாயார் முறைப்பாடு செய்த போது நான் சரியான கவனம் எடுக்கவில்லை. சென்று பார்க்கவில்லையென்பதாகும். தாயாருடன் சினந்தோ சீறியோ பதிலளிக்க வேண்டிய எந்த அவசியமும் எனக்கு நேரவில்லை. அவர் தேடி வந்து முறையிட்டது ஒரு தடவை மட்டுமே. அதன்போது நான் நேரடியாகச் சென்று அவதானித்திருந்தேன். அவருடன் இந்த இரு சந்தர்ப்பங்கள் மட்டுமே எனக்கு கதைக்க நேர்ந்திருந்தது.

குறித்த கனுலாவூடாக நான்கு ஐந்து தடவைகள் மருந்து ஏற்றப்பட்டதன் பின்னர் கடைசி மருந்தை ஏற்றியது நான் ஆவேன். கனுலா பொருத்திய விதம் தவறெனின் அதனை நான் எவ்விதம் அறிந்து கொள்ள இயலும். மற்றையது நான் ஏற்றிய சிறிய அளவுடைய மருந்தே குறித்த பிள்ளையின் கை அகற்றுவதற்குக் காரணமாகியிருந்ததென எந்தவொரு வைத்திய நிபுணரும் கூற இயலாது.

மேலும் வைத்தியசாலையில் நடைபெறும் உள்ளக விசாரணை ஒரு போதும் சுயாதீனமானதாக இருக்க இயலாதென்பதை உறுதிப்படுத்திக் கூறுகின்றேன். காரணம் குறித்த விசாரணைக் குழுவில் நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு வைத்திய நிபுணர் எமது விடுதிக்குப் பொறுப்பான வைத்திய நிபுணருடனும் குறித்த விடுதித் தாதிகள் ஆகிய எம்முடனும் காழ்ப்புணர்வு கொண்ட ஓர் நபர் ஆவார்.

இது வைத்தியசாலைப் பணிப்பாளருக்கும் நன்கு தெரியும். குறித்த விசாரணை அதிகாரி என்னிடம் விசாரணை செய்த பொழுது என்னை பதற்றப்படுத்தும் வகையில் ஆம் அல்லது இல்லையென மட்டும் பதிலளிக்குமாறு உறுக்கிய குரலில் வினவியே வாக்கு மூலம் பதிவு செய்திருந்தார். குறித்த வைத்திய நிபுணரின் வைத்திய விடுதியில் எனது சொந்தப்பிள்ளையை நான் வாந்தி காய்ச்சல் காரணமாக அனுமதி க்க நேர்ந்திருந்த சமயத்தில் கூட நான் அருகிலுள்ள விடுதியில் கடமையாற்றுபவள் என்பதைக் காரணம் காட்டி எனது விடுதிக்கு மாற்றும் வரையில் என் பிள்ளைக்கு 24 மணித்தியாலங்கள் ஆகியும் சேலைன் கூட ஏற்ற மறுக்கப்பட்டிருந்தது. அவ்வாறாயின் அவரால் எவ்விதம் பாரபட்சமற்ற விசாரணையோ இயலும்?

அது மட்டுமன்றி நான் அறிந்த வகையில் குறித்த பிள்ளை தோல் நோய் தொற்று மற்றும்  காய்ச்சல் காரணமாக முதலில் கங்காதரன் வைத்தியசாலையில் வைத்திய நிபுணரிடம் ஆலோசனை பெற்று அங்கேயே ஊசி மருந்தும் ஏற்றப்பட்டு கையில் கனுலாவுடனேயே வீட்டிற்கு அனுப்பப்பட்டு, வீட்டிலிருந்து வந்து மருந்தேற்றிச் சென்றுள்ளார் .

பின்னர் நொதேண் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு இரு கையிலும் கனுலா இடப்பட்டு மருந்தேற்றப்பட்டது. பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அக்கனுலாக்கள் ஊடாகவே யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருநாள் முழுவதும் மருத்தேற்றப்பட்டது.

கையில் ஒட்டப்பட்ட பிளாஸ்ரர் உரித்து எடுக்கப்படும் போது பிள்ளையின் தோலும் சேர்ந்து உரிந்து வருகின்ற பாரதூரமான நிலைமை இருந்து.

குறித்த பிள்ளையின் கை ஒட்சிசனின்றி செயற்பாடின்றி செல்கள் அனைத்தும் இறக்கும் ஓர் நிலைக்குச் செல்வதற்கு குறைந்தபட்சம் 36 மணித்தியாலங்கள் தேவைப்படுமென்றால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னர் தனியார் மருத்துவமனைகளில் குறித்த பிள்ளையின் கையை பாதிக்கும் வகையில் கனுலாக்கள் போடப்பட்டதா? மருந்து ஏற்றப்பட்டதா? தவறான சிகிச்சையேதும் அளிக்கப்பட்டதா? என்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு விசாரணையும் செய்ததாக நான் அறியவில்லை.

எது எவ்வாறாயினும் இதற்கு மேல் எதுவித துன்பமும் தேவையில்லை என்ற அளவில் எனக்கு பாரிய அவமானம் ஏற்பட்டு விட்டது. மாறாக குற்றத்தை ஏற்றுக் கொள்ளுமாறு என்னை வைத்தியசாலை வட்டாரம் வற்புறுத்துகின்றது. எல்லா வழிகளாலும் என்னைப் பலவீனமாக்கி என்னைப் பலிக்கடாவாக்க முயலும் ஓர் காரியமே எனது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தவறான செய்தி பரப்பும் செயலாகும். எனக்கும் இரு குழந்தைகளும் வயோதிபப் பெற்றோரும் உள்ளார்கள். குறித்த குழந்தைக்காக நானும் கடவுளிடம் இரந்து வேண்டியிருந்தேன். அதற்கு எந்தவொரு தீங்கும் நினைத்து நான் செயற்படவில்லை. என்னால் அதற்கு எந்தவொரு தீங்கும் நிகழ்ந்ததாகச் சொல்வதை நான் நம்பவில்லை. ஆனால் இப்பிரச்சினையால் நானும் எனது குடும்பத்தவருமே தற்கொலை செய்தால் என்ன என்ற அளவில் மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எனவே தகுந்த விசாரணைகளை மேற்கொண்டு உண்மையில் நிகழ்ந்ததைத் தெரியப் படுத்த வேண்டுமென்று வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

இதையும் படியுங்கள்

கூரை சூரிய மின்சக்தி அமைப்பு வைத்திருப்பவர்களிற்கு மின்சாரசபையின் அறிவிப்பு!

Pagetamil

ஜேவிபி வேறு… என்.பி.பி வேறாம்; ஜேவிபிக்கு கிடைத்த யாழ்ப்பாண காமராஜரின் உலகமகா உருட்டு!

Pagetamil

ஊழலற்ற உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்க சங்கிற்கு வாக்களியுங்கள்: சந்திரகுமார் வேண்டுகோள்

Pagetamil

யாழில் சர்ச்சைக்கு பதிலளிக்காமல் நழுவிச் சென்ற அமைச்சர்

Pagetamil

வடக்கில் அமையவுள்ள 3 முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் முதலீடு செய்யுங்கள்: புலம்பெயர் தமிழர்களிற்கு யாழ் வணிகர் கழகம் அழைப்பு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!