இந்திய அணியின் கப்டன் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார்.
ஆசிய கோப்பை தொடர் போட்டிகளின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இலங்கையின் கொழும்பு ஆர்.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தப் போட்டியில் 23 ரன்களை சேர்த்தபோது, ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை குவித்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்தப் பட்டியலில் 18,426 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். நேற்றைய போட்டியில் 13 ஆயிரம் ரன்களை கடந்த விராட் கோலி 13.024 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவர்களைத் தொடர்ந்து கங்குலி (11.363 ரன்கள்), ராகுல் திராவிட் (10,889 ரன்கள்), எம்.எஸ்.தோனி (10,773) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் 6வது வீரராக ரோகித் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
10,000 ஓட்டங்களை விரைவாக பெற்ற 2வது வீரராகவும் ரோஹித் உள்ளார். அவர் 241 இன்னிங்ஸில் இந்த மைல் கல்லை எட்டினார். 205 இன்னிங்ஸில் இந்த மைல் கல்லை எட்டிய விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.