4ஆம் மாடியில் சினிமா பாணி சம்பவம்: பொலிசாருக்கு போதை தேநீர் கொடுத்து விட்டு தப்பியோட முயன்ற ஹரக் கட்டா; ஒத்துழைத்த பொலிஸ்காரர் தலைமறைவு!

Date:

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள  தென்னிலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவரும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரருமான நடுன் சிந்தக அல்லது ஹரக் கட்டா, விசேட அதிரடிப்படையின் உப பொலிஸ் பரிசோதகரின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் 6ஆவது மாடியில் உப பொலிஸ் பரிசோதகர் சந்தேக நபருடன் சண்டையிட்டு மிகுந்த பிரயத்தனப்பட்டு அவரை அடக்கியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹரக் கட்டா தப்பிக்க உதவியதாக சந்தேகிக்கப்படும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பணிபுரியும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சம்பவத்தின் பின்னர் எவருக்கும் தெரிவிக்காமல் தப்பிச் சென்றுள்ளார்.

நேற்று மதியம் 12.30 மணியளவில் ஹரக் கட்ட நான்காவது மாடியில் இருந்து 6வது மாடியில் உள்ள பொது முறைப்பாடுகள் விசாரணை பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கழிவறைக்கு செல்ல வேண்டும் என ஹரக் கட்டா கூறியதையடுத்து, தற்போது தலைமறைவாகியுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் அவரை கழிப்பறைக்கு அழைத்து சென்றுள்ளார். கழிப்பறைக்குள்ளிருந்து திரும்பி வந்தபோது இது நடந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்படி பொலிஸ் கான்ஸ்டபிளுடன் கழிவறையில் இருந்து ஹரக் கட்டா வந்ததாகவும், உடனடியாக அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டரின் மீது பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.

ஹரக் கட்டாவுடன் சப்-இன்ஸ்பெக்டர் போராடி உதவி கோரி கூச்சலிட்டதாகவும், சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்த ஏனைய பொலிசார், ஹரக் கட்டாவை பிடித்து அழைத்துச் சென்றதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கழிவறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஹரக் கட்டாவின் கைவிலங்கு கழற்றப்பட்டு, கைவிலங்குடன் வருவதை போல பாவனை செய்துள்ளார். உப பொலிஸ் பரிசோதகரை தாக்கி, அவருக்கு கைவிலங்கிட்டு, அவரது துப்பாக்கியை பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முற்பட்ட போதே ஹரக் கட்டா பிடிக்கப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பொலிசார் குறைவாகவே கடமையில் இருப்பதாகவும், இதையெல்லாம் அவதானித்தே சந்தேக நபர் இவ்வாறு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உப பொலிஸ் பரிசோதகரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் செல்ல தயாராகி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஹரக் கட்டாவுக்கு தப்பிச் செல்ல உதவ முயன்றதாகக் கூறப்படும் சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளைத் தேடுவதற்காக அவரது கிராமமான திருகோணமலைக்கு பல பொலிஸ் குழுக்கள் சென்றுள்ளன, ஆனால் அவரும் வீட்டில் இல்லை.

தற்போது காணாமல் போன கான்ஸ்டபிள், சம்பவத்திற்கு முன்னர்  அந்த மாடியில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு ஒரு வகை ரொபி வழங்கியதாகவும் அதிகாரப்பூர்வமற்ற பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கசப்பாக இருந்ததால் பலர் சாப்பிடவில்லை. இதையடுத்து, அந்த கான்ஸ்டபிள் தேநீர் தயாரித்து பரிமாறினார்.

தேநீர் அருந்திய உத்தியோகத்தர்கள் போதையில் இருந்ததாகவும், தலைவலி ஏற்பட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹரக் கட்டா சிக்கியதும், அவருக்கு உதவிய கான்ஸ்டபிள் 4வது மாடிக்கு ஓடிச்சென்று கைத்தொலைபேசியை எடுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளார். அவர் தவறுதலாக தனது கைத்தொலைபேசியை விட்டுவிட்டு, இன்னொருவருடைய தொலைபேசியை எடுத்துக் கொண்டு தப்பியோடி விட்டார்.

தப்பியோடிய கான்ஸ்டபிள் தங்கியிருந்த தாணிக்கடை பொலிஸ் விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவரது ஆடைகளுக்குள் போதைப்பொருள் வகை இருந்துள்ளதுடன், உத்தியோகத்தர்களுக்கு தேநீர் கொடுக்கும் போது  இந்த போதைப்பொருளை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, இந்த போதைப்பொருள், ரொபி ஆகியவை பரிசோதனையாளருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

தப்பியொடிய பொலிஸ் கான்ஸ்டபிள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 071-85917774 அல்லது 0718594929 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்