வீட்டிலிருந்த தங்க நகைகளை திருடர்கள் கொள்ளையிடக்கூடும் என்ற அச்சத்தில், சமையலறையில் உள்ள குப்பைத் தொட்டியில் தங்க நகைகளை மறைத்து வைத்து விட்டு இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள ஒருவர் செனிறுள்ளார். எனினும், சமையலறை குப்பைக்கூடைக்குள் தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை அறியாத அவரது மகள், குப்பைக்கூடையை எடுத்து குப்பை சேகரிக்கும் உழவு இயந்திரத்தில் ஒப்படைத்து விட்டார் என கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டு உரிமையாளர் சமீபத்தில் ஒரு இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக தனது வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டியிருந்தது. வீட்டில் தான் இல்லாத நேரத்தில் யாராவது வந்து தங்கநகைகளை திருடிச் சென்று விடுவார்கள் என எண்ணிய அவர், யாருக்கும் சந்தேகம் வராது என முடிவு செய்த இடத்தில் தங்கநகைகளை மறைத்து வைத்திருந்தார்.
வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டாலும் சமையலறையில் உள்ள குப்பை்கூடையை யாரும் தொடமாட்டார்கள் என எண்ணி கடைசியில் தனது தங்கநகைகளை எல்லாம் குப்பைக்கூடையில் மறைத்து வைத்து விட்டு, நிம்மதியாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் வீடு திரும்பிய இந்த நபர், தங்கநகைகளை பாதுகாப்பாக எடுத்து வைப்பதற்காக சமையல் அறைக்குச் சென்றுள்ளார். ஆனால் சமையலறையில் குப்பைக்கூடை இல்லாததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
குப்பைக்கூடையை தேடும் போது அவரது மகள் வந்து குப்பையை கொண்டு செல்ல வந்த மாநகர சபை உழவு இயந்திரத்தில் குப்பைக்கூடையை போட்டதாக கூறியுள்ளார்.
இறுதியில் சுமார் 3.2 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை இழந்த குறித்த நபர் இந்த சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். இது தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரின் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.