Pagetamil
இலங்கை

இத்தாலியிலிருந்து விடுமுறையில் வந்த யாழ்ப்பாண தம்பதிக்குள் மோதல்; தாய் வீட்டில் கைவிடப்பட்ட மனைவி; சட்டத்தரணியின் உதவியுடன் பிள்ளைகள் கடத்தலா?: யாழ் மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு!

இத்தாலியிலிருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த போது, தன்னை தாக்கி, பலவந்தமாக பிள்ளைகளை பறித்துக் கொண்டு கணவன் நாட்டை விட்டு தப்பியோடியதாக குறிப்பிட்டு, பிள்ளைகளை மீட்டுத்தரக் கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் பெண்ணொருவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது, முறைப்பாட்டாளரான பெண் சார்பில் சட்டத்தரணி  சர்மினி பிரதீபன் முன்னிலையானார்.

பிரதிவாதிகளாக பெண்ணின் கணவர், அவரது சகோதரன் (பிரித்தானியாவிலிருந்து வந்தவர்), சகோதரி, சட்டத்தரணியொருவர், பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பருத்தித்துறையிலுள்ள பேக்கரியொன்றின் உரிமையாளர் என 6 பேர் பெயரிடப்பட்டுள்ளனர். பிரதிவாதிகள் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கு.குருபரன் உள்ளிட்ட 18 சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த 27 வயதான இளம் தாயொருவரே மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரது முறைப்பாட்டின்படி, 2015ஆம் ஆண்டில் அவருக்கும், பருத்தித்துறை, தும்பளையை பிறப்பிடமாக கொண்டு, இத்தாலியில் வசித்து வந்த இளைஞன் ஒருவருக்கும் திருமணமானது. திருமணத்தின் பின்னர் இருவரும் இத்தாலியில் வசித்து வந்தனர்.

அவர்களிற்கு தற்போது 3 பிள்ளைகள் உள்ளனர். 5, 3 வயது பிள்ளைகளும் 15 மாத குழந்தையும் உள்ளனர்.

கணவனின் சகோதரனின் திருமணம் கடந்த மாதம் பருத்தித்துறையில் நடந்தது.

இந்த திருமணத்தில் கலந்து கொள்ள ஜூன் 25ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு இந்த தம்பதியினர் வந்துள்ளனர். கணவனின் தம்பியின் திருமணம் ஓகஸ்ட் 16ஆம் திகதி நடந்தது. 19ம் திகதி நாலாம் சடங்கு நடந்தது.

அதன் பின்னர்,  19ஆம் திகதி தம்பதியிடையே தகராறு ஆரம்பித்துள்ளது. இதையடுத்து, முறைப்பாட்டாளரான பெண்ணை, கணவன் குடும்பத்தினர் தும்பளையிலுள்ள வீட்டில் 20ஆம் திகதியிலிருந்து பூட்டி வைத்துள்ளனர். மூத்த பிள்ளைகள் இருவரையும் கணவன் குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளனர். கடைசிக் குழந்தையை கொடுக்க மனைவி மறுத்து, தன்னுடனேயே வைத்துக் கொண்டுள்ளார்.

அறைக்குள் பூட்டப்பட்டதையடுத்து மனைவி சாப்பிடாமல் அடம்பிடிக்கத் தொடங்கியதையடுத்து, அவரை சமாதானம் செய்வதை போல பேசியுள்ளனர். எந்த பிரச்சினையும் இல்லை, சட்டத்தரணியொருவரிடம் செல்வோம், அவர் இந்த குடும்ப பிரச்சினைக்கு தீர்வு காண்பார் என சமரசம் பேசி அவரை சட்டத்தரணியிடம் அழைத்து சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு சென்றதும், சட்டத்தரணி பெண் மீது குற்றம்சாட்டியதாகவும், பிள்ளையை வைத்திருக்க முடியாது என குறிப்பிட்டு, பெண்ணின் கையிலிருந்த குழந்தையை பறித்தெடுத்து தந்தையிடம் கொடுத்ததாகம் பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைக்கு தான் பொறுப்பாளியென்றும், மீண்டும் வாங்கித் தருவேன் என சட்டத்தரணி பின்னர் தன்னிடம் உறுதியளித்ததாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

மறுநாள் சட்டத்தரணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு குழந்தையை கேட்டபோது, இந்த விவகாரத்தில் தன்னால் பொறுப்பேற்க முடியாதென அவர் தெரிவித்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தரணியின் வீட்டுக்கு அந்த பெண் குழந்தையுடன் சென்றார். அங்கிருந்து குழந்தையில்லாமல் திரும்பி வந்தால், குற்றச்சம்பவம் சட்டத்தரணியின் வீட்டில்தான் நடந்துள்ளது என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், பேக்கரி உரிமையாளரும், கணவனின் சகோதரனும், அந்த பெண்ணை பலவந்தமாக இழுத்து காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். இரவு 10.30 மணியளவில் அல்லைப்பிட்டியிலுள்ள பெண்ணின் வீட்டிற்கு சென்று, அங்கு காரிலிருந்து கீழே தள்ளிவிழுத்தி விட்டு சென்றதாக ஆட்கொணர்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பெண்ணின் கடவுச்சீட்டு, விமான சீட்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் கணவன் பறித்து வைத்துக் கொண்டதாகவும், பிள்ளைகளுடன் இத்தாலிக்கு தப்பிச் சென்று விட்டதாகவும் முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் பருத்தித்துறை பொலிசார் பக்கச்சார்பாக நடந்து கொண்டதாக பெண்ணின் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர். தாய்ப்பால் அருந்தும் குழந்தை உள்ளிட்ட 3 பிள்ளைகளின் கதி என்னவென தெரியாத நிலையில், பருத்தித்துறை பொலிசாரை நாடி, குற்றவியல் வழக்கு பதிவு செய்ய கோரிய போதும், பருத்தித்துறை பொலிசார் அதை செயற்படுத்தவில்லை. தாம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த பின்னரே பொலிசார் வழக்கு பதிவு செய்ததாகவும், அதுவும் தமது முறைப்பாட்டிற்கு முரணாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டாளரான பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பாவிடம் பிள்ளையை கொடுத்தமை, கணவனின் தங்கை குறிப்பிட்ட பெண்ணை தாக்கியமை என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் கணவனை சந்தேகநபராக பெயரிடவில்லையென்றும், வழக்கை 2024 மார்ச்சில் நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, சட்டத்தரணியொருவரும் இந்த வழக்கில் சிக்கி, ஆட்கொணர்வு மனுவில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளதையடுத்து, சட்டத்தரணிகள் குழாமொன்றே வழக்கில் முன்னிலையானது.

சட்டத்தரணி குழந்தையை பலவந்தமாக பறித்து கொடுக்கவில்லை, அவர் அந்த தம்பதி இணக்கமாக செயற்பட வேண்டுமென ஆலோசனை வழங்கினார் என, அவர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர்.

அத்துடன், முறைப்பாட்டாளரான பெண், இத்தாலியில் தனது கணவரின் நெருங்கிய உறவினரான இளைஞர் ஒருவருடன் நெருக்கமான உறவில் இருப்பதாகவும், இதுவே தகராறிற்கு காரணம் எனம் கணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவியுடன் நெருக்கமாக பழகுவதாக குறிப்பிட்ட இளைஞரும், அந்த கல்யாண வீட்டிற்காக தற்போது பருத்தித்துறை வந்துள்ளார்.

எனினும், முறைப்பாட்டாளரான பெண் தரப்பினர் அதை மறுத்துள்ளனர். இத்தாலியில் இத்தனை வருடங்களாக வாழ்ந்தாலும், அங்கு தகராறு ஏற்பவில்லையென்றும், இங்கு திடீரென தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். இத்தாலியில் பிள்ளைகளை பலவந்தமாக பறித்துக் கொண்டு சென்றல் கடுமையான சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டுமென்பதால், இலங்கை வந்த போது கணவர் தரப்பினர் இவ்வாறு செயற்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0

இதையும் படியுங்கள்

மனைவியை சுட்டுக்கொல்ல துப்பாக்கியுடன் தலைமறைவான திருகோணமலை கடற்படை சிப்பாய் கைது!

Pagetamil

பொது மன்னிப்பில் ரஷ்ய பெண்ணும் விடுதலை

Pagetamil

சுனாமி 20: ‘பேபி 81’ இற்கும் 20 வயது!

Pagetamil

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது

east tamil

மதுபோதையில் டிப்பர் செலுத்தியவரால் கொடூரம்: கிளிநொச்சியில் 2 வயது சிறுமி பலி!

Pagetamil

Leave a Comment