முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகவியலாளருமான ஜே.ஸ்ரீ ரங்கா தனது வழக்கை வவுனியா மேல் நீதிமன்றத்தின் மற்றுமொரு நீதிபதி முன்னிலையில் விசாரிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை இருவரடங்கிய நீதிபதிகள் குழாம் நிராகரித்துள்ளது.
தாம் உட்பட ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் தற்போது விசாரிக்கப்பட்டு வரும் வழக்கின் நீதிபதி பாரபட்சம் காட்டுவதாகக் குறிப்பிட்டே ஸ்ரீ ரங்கா இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பக்கச்சார்புடன் செயற்பட்டமைக்கான ஆதாரங்களை மனுதாரரால் முன்வைக்க முடியாத நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மேன்முறையீட்டு மனுவை நிராகரித்துள்ளது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் காரணமாக தாம் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த மனுதாரர், இந்த உத்தரவை நீக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
2011 ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் ஸ்ரீ ரங்கா மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் திகதி வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அருகில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா ஓட்டிச் சென்ற பதிவு செய்யப்படாத வாகனம் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது வாகனம் மோதியதில் பாராளுமன்ற உறுப்பினரின் மெய்ப்பாதுகாவலராக இருந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.
விபத்தின் பின்னர், வாகனத்தை பொலிஸ் சார்ஜன்ட் ஓட்டியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாக்குமூலம் அளித்திருந்தார். எவ்வாறாயினும், அந்த வாகனத்தை எம்பி ஓட்டிச் சென்றது பின்னர் விசாரணையில் தெரியவந்துள்ளது.