தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய அஜித் ரோஹணவை கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் செய்த தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரிக்க உயர் நீதிமன்றம் நேற்று (4) தீர்மானித்துள்ளது.
மேற்படி மனுவுக்கு எதிராக சட்டமா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட ஆரம்ப ஆட்சேபனைகளை ஏற்று, இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரரை தென் மாகாணத்திலிருந்து இடமாற்றம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் நியாயமற்றது என மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பைஸ் முஸ்தபா தெரிவித்தார்.
மனுதாரரை கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யுமாறு பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்ட கடிதத்தை செல்லுபடியற்ற வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றில் கோரியுள்ளார்.
பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கங்கா வாகிஷ்ட ஆராச்சி, மனுதாரர் அஜித் ரோஹனவின் இடமாற்றம் சட்டரீதியாகவே மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார்.
அவருடன் மேலும் ஆறு சிரேஷ்ட டிஐஜிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிவித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அவர்களில் எவரும் இடமாற்றத்தை சவால் செய்யவில்லை என்று கூறினார்.
உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, உண்மைகளை பரிசீலித்து மனுவை விசாரிக்காமல் தள்ளுபடி செய்ய முடிவு செய்தது.