நாட்டின் சில பகுதிகளில் இன்று (03) பெய்து வரும் கடும் மழை காரணமாக நான்கு மாவட்டங்களில் உள்ள 19 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, காலி மாவட்டத்தில் பத்தேகஹ, எல்பிட்டிய மற்றும் நாகொட பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதல் நிலை மண்சரிவு அபாய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், களுத்துறை மாவட்டத்தின் வள்ளலாவிட்ட, பாலிந்தநுவர, மத்துகம மற்றும் மற்றும் புலத்சிங்களவில் உள்ள இங்கிரிய பிரதேச செயலகப் பிரிவுகளில் இரண்டாம் நிலை எச்சரிக்கை அறிவிப்பும் வழங்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தில், ருவன்வெல்ல, புலத்கொஹுபிட்டிய, யட்டியந்தோட்டை, தெரணியகல, மற்றும் தெஹியோவிட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில், கலவன கிரியெல்ல மற்றும் அயகம பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதல் நிலை எச்சரிக்கை அறிவிப்பும், அஹலியகொட, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலக பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பிரதேச செயலகங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், தொடர்ந்தும் மழை பெய்தால் மண்சரிவு அபாயம் குறித்து அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.