26.8 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

வெலிக்கடை பொலிசில் ராஜகுமாரி மரணம்: பின்னணியில் நடந்த சம்பவங்கள்!

ராஜகுமாரியென்ற வீட்டுப் பணிப்பெண் அண்மையில் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் வைத்து அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பரவலாக கவனத்தையீர்த்த நிகழ்வாக மாறியுள்ளது.

பொலிஸ் காவலில் நடந்த இந்த சட்டவிரோத கொலை விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்தில் உள்ளது. கொலையுடன் தொடர்புடைய 4 பொலிசார் இதுவரை கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம், ராஜகுமாரியின் மரணம் பொலிஸ் தாக்குதலால் ஏற்பட்ட கொலை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய உத்தரவின் பேரில், ஓகஸ்ட் 28ஆம் திகதி வெலிக்கடை காவல்துறையில் பணிபுரியும் அஜித் குமார என்ற இந்த உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டார். ஓகஸ்ட் 29 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் செப்டம்பர் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 01 ஆம் திகதி இடைநிறுத்தத்தில் இருந்த இரண்டு சார்ஜன்ட்கள் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவரையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்தனர்.
இந்த கொலையில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் இன்னும் கைது செய்யப்படவில்லை.

மே 11ஆம் திகதி வெலிக்கடை பொலிஸில் இந்தக் கொலை இடம்பெற்றது.  பதுளை, நாவலவத்தை, தெமோதர பிரதேசத்தில் வசித்து வந்த ஆர்.ராஜகுமாரி என்ற 42 வயதான மூன்று பிள்ளைகளின் தாயாரே பொலிசாரால் அடித்துக் கொல்லப்பட்டார்.

அவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து கொடூரமான முறையில் அடித்துக் கொன்றுவிட்டு, வீதியில் விழுந்து கிடந்தவரின் சடலம் என பொலிசார் நாடகம் ஆடி, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

கதையை வேறு திசையில் திருப்பி, பொலிஸ் நிலையை கொலையை மறைத்து, வைத்தியசாலையில் உடலை ஒப்படைத்தனர்.

எனினும், பல சிவில் அமைப்புக்களின் தொடர் முயற்சியால், பொலிசார் ஆடிய நாடகம் அம்பலமானது.

தனது வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து, பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், வர்த்தகருமான சுதர்மா நெத்திகுமார விடுத்த வாய்மொழி அறிவிப்பின்படி, பொலிஸ் புத்தகங்களில் ராஜ் குமாரிக்கு எதிராக எந்த புகாரும் எழுதப்படாத நேரத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளது விசாரணையில் உறுதியாகியுள்ளது.

உயர் அதிகாரிகளிடம் இருந்து பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்புகளின் பிரகாரம், சுதர்ம நெத்திகுமாரவின் வீட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் திருட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதில் வெலிக்கடை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் பொலிசாரின் ஆர்வம், சட்டவிரோதமாகி, ஒரு உயிரை பறித்து, இப்பொழுது நீதிமன்ற கூண்டிலேற வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளனர்.

திருட்டுச் சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் சுதர்மா நெத்திகுமாரவின் வீடு வெலிக்கடை பொலிஸ் பிரிவில் ராஜகிரிய குரே வீதியில் உள்ள ரோயல் கார்டனில் அமைந்துள்ளது. அங்கு கணவருடன் வசித்து வருகிறார்.

இந்த வீட்டில் ராஜ் குமாரி ஒரு வருடத்திற்கும் மேலாக வேலை பார்த்ததாக கூறப்படுகிறது.
மே 3ஆம் திகதி இந்த வீட்டில் இருந்து வேறு வீட்டில் வேலைக்குச் சென்றுள்ளார். சுதர்மா நெத்திகுமாரவின் கூற்றுப்படி, மார்ச் 26 முதல் மே 3 வரை வீட்டில் திருட்டு இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரிடம் அவர் முதலில் கூறியபடி, தங்க மோதிரம், வாசனை திரவிய போத்தல் மற்றும் ஒரு ஜோடி காலணிகள் திருடப்பட்டன. அவரது முதற்கட்ட தகவலின்படி, அவற்றின் மதிப்பு ஐந்து அல்லது ஆறு இலட்ச ரூபாய்தான்.

தனது கணவருடன் வெளியூர் சென்றிருந்த போது பணிப்பெண் இவற்றை திருடிவிட்டதாக சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

திருடப்பட்ட மோதிரம், வாசனை திரவிய போத்தல் மற்றும் காலணிகளை கண்டுபிடிக்குமாறு மே 11 ஆம் திகதி வெலிக்கடை பொலிசார் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அப்போது ராஜ் குமாரி எங்கே இருக்கிறார் என்பதை முதலில் கண்டுபிடிக்க பொலிசார் முயற்சித்தனர்.

மலையகத்திலிருந்து பெண்களை வீட்டுப் பணிக்காக அழைத்து வரும்,  ஒரு தரகர் மூலமே ராஜகுமாரியை, சுதர்மா தனது வீட்டில் வேலைக்கு இணைத்திருந்தார்.

அந்த தரகரின் பெயர்  மகேந்திரம் சுரேஷ்.

சுதர்மாவின் காணாமல் போன மோதிரத்தைக் கண்டுபிடிப்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட வெலிக்கடை பொலிசார், சுதர்மாவின் உதவியுடன் அந்த நபரின் அடையாளத்தைக் கண்டுபிடித்தனர்.

பொலிசார் சுரேஷின் தொலைபேசிக்கு அழைப்பேற்படுத்திய போது, அவர் புறக்கோட்டை பேருந்து தரிப்பிடத்துக்கு சென்று கொண்டிருந்தார். கொழும்பில் வீட்டு பணிப்பெண்ணாக வேலை செய்ய மலையகத்திலிருந்து இளம் யுவதியொருவர் வந்து கொண்டிருந்துள்ளார். அவரை அழைத்து செல்லவே சுரேஷ் அங்கு சென்றிருந்தார்.

அதையறிந்த பொலிசார், புறக்கோட்டை பேருந்து நிலையத்துக்குச் சென்று, பெரும் நடவடிக்கையின் பின்னர் மிகப்பெரிய குற்றவாளியை கைது செய்வதை போல, சுரேஷின் கழுத்தைப் பிடித்தனர்.

அதே சமயம் சுரேஷை இரண்டு மூன்று முறை அடித்து கைவிலங்கிட்டு வெள்ளை காரில் ஏற்றினார்கள்.

திருடப்பட்ட தனது பொருட்களை மீட்டு தரும் நடவடிக்கைக்காக, வெலிக்கடை பொலிசாருக்கு சுதர்மா கொடுத்திருந்த காரிலேயே சுரேஷ் ஏற்றப்பட்டுள்ளார். கார் சாரதியையும் சுதர்மாவே நியமித்துள்ளார்.

சுரேஷ் தற்போது வழங்கியுள்ள தகவலின்படி, அப்போது அந்த காரில் சாரதியை தவிர இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.

கடந்த 1ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களில், இந்த இரண்டு சார்ஜன்ட்களும் அடங்குவர்.

அவர்கள் சுரேஷை  கைது செய்தபோது சிவில் உடையில் இருந்தனர். சீருடையில் யாரும் இல்லை.

ராஜ் குமாரி இப்போது எங்கே இருக்கிறார் என்று சுரேஷிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது பொரளை கோட்டா வீதியில் அமைந்துள்ள வீட்டில் ராஜ் குமாரி வேலை செய்து கொண்டிருந்தார். மே 3ஆம் திகதி முதல் அங்கு பணிபுரிந்து வருகிறார்.

அவர் அந்த வீட்டில் பணிபுரிய சுரேஷ் உதவிபுரிந்துள்ளார். அதனால், ராஜகுமாரி வேலை செய்யும் இடம் சுரேஷுக்குத் தெரியும்.

சுரேஷ் இந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

அப்போது நேரம் சுமார் 12.30 மணி.

அங்கு, அந்த வீட்டுக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், அதன் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த அஜித் விஜேசிங்க என்ற தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தரை முதலில் சந்தித்தனர். சாதாரண உடையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், வெலிக்கடை பொலிஸார் என அறிமுகம் செய்து கொண்டு “குமாரி என்றொருவர் இந்த வீட்டில் வேலை செய்கிறாரா?“ என பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கேட்டனர்.

பாதுகாப்பு உத்தியோகத்தர் ஓம் என்றார்.

“ஒரு திருட்டு குறித்து அவரிடம் விசாரிக்க வேண்டும். அவரை எங்களிடம் ஒப்படையுங்கள்.  அவரைக் காவலில் எடுக்கப் போகிறோம்“ என்றனர்.

பாதுகாப்பு உத்தியோகத்தர் தனது முதலாளிகளுக்கு தகவல் அளித்தார். ராஜகுமாரி திருட்டுக்காக தேடப்படுவதாக அவர்கள் கூறியதால் பொலிசாரிடம் ஒப்படைத்தார்.
சுதர்மாவின் வாய்மொழி புகாரின்படி செயற்பட்ட பொலிசார், ராஜகுமாரியை  ஒரு திருடனைப் போல நடத்தினர். ஆனால் அவர் தனது எல்லா வேலைகளையும் உண்மையாகவும் விடாமுயற்சியாகவும் செய்தவர் என்று வீட்டுக்காரர்கள் கூறுகிறார்கள்.

ஒரு பெண்ணை கைது செய்ய செல்லும் போது பெண் பொலிஸ் உத்தியோகத்தர் இருக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டு பொலிசாரும் சட்டத்தை மீறி ராஜ் குமாரியை கைது செய்தனர்.

ராஜகுமாரியை சட்ட விரோதமாக கைது செய்தது மட்டுமின்றி, சுரேஷின் கைகளில் இருந்த விலங்கின் ஒரு பகுதியை அகற்றி, ராஜகுமாரியின் கையில் போட்டனர். அதாவது, ஒரு கைவிலங்கின் ஒரு பக்கத்தில் சுரேஷ் பிணைக்கப்பட்டிருந்தார். மறுமுனையில் ராஜகுமாரி பிணைக்கப்பட்டுள்ளார்.

“சுதர்மா மேடம் வீட்டில் மோதிரம், வாசனைப் போத்தல், செருப்பு ஆகியவற்றைத் திருடியது நீங்கள்தான். இப்போது எங்கே அவற்றை வைத்துள்ளீர்கள்?” என்று ராஜ குமாரியை காரில் இருத்தி, அந்த இரண்டு பொலிஸ்காரர்களும் விசாரிக்க ஆரம்பித்தனர்.

“ஐயோ சேர், எனக்கு ஒன்றும் தெரியாது. நான் எந்த பொருளையும் திருடவில்லை.
வேண்டுமானால், நான் வேலை செய்த ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தேடுங்கள்.
சுதர்மா மேடம் வீட்டில் வேலை செய்ய முடியாததால் விட்டுவிட்டேன். அந்த கோபத்தில் தான் என் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு சொல்லப்பட்டிருக்கிறது“ என்று ராஜகுமாரி தெரிவித்துள்ளார்.

அதற்கு பொலிசார் செவிசாய்க்கவில்லை. அவர்கள் சுதர்மாவின் குற்றச்சாட்டை மட்டுமே நம்பினர்.

“வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் வைத்து, நானும் ராஜகுமாரியும் பொலிசாரால் கொடூரமாக தாக்கப்பட்டோம்.  மொட்டையான, மெலிந்த உயரமான பொலிஸ்காரர், தண்ணீர் குழாயால் ராஜகுமாரியை அடித்ததை நான் பார்த்தேன்” என சுரேஷ் இந்த விஷயங்களை குற்றப் புலனாய்வுத் துறையினர் முன்பும் நீதிமன்றத்திலும் ஏற்கனவே கூறியிருக்கிறார்.

சுரேஷின் இந்த சாட்சியத்தாலேயே பொலிஸ் வில்லங்கத்தில் சிக்கியது.

சுரேஷின் தகவல்படி, இருவரையும் பொலிசார் தாக்கி விசாரிக்கும் போது சுதர்மாவும் அங்கு வந்து சென்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், ராஜகுமாரி பணியாற்றிய கோட்டா வீதியில் உள்ள வீட்டுக்கு சுதர்மா சென்றிருப்பதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் புலனாய்வாளர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

சுதர்மாவின் செல்வாக்கு காரணமாக கோட்டா வீதியிலுள்ள வீட்டின் பாதுகாப்பு கமெராக் காட்சிகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரணையாளர்கள் விசேட கவனம் செலுத்தினர்.

ஏனென்றால், இந்த தொடர் நிகழ்வுகளில், விசாரணையின் போது சுதர்மாவின் நடத்தை குறித்து ஒரு பெரிய சிக்கல் தோன்றியுள்ளது.

“பொலிசார் எங்களை அடிக்கும் போது சுதர்மா மேடம் அங்கு வந்தார். அவர் வந்து,  அடிக்க வேண்டாம், பிரச்னையை பேசி தீர்க்கும்படி சொன்னார்“ என சுரேஷ்குமார் மேலும் கூறுகிறார்.

இந்த நேரத்தில்தான் ராஜகுமாரி காவல்துறையின் தாக்குதலைத் தாங்க முடியாமல் தரையில் விழுந்து துடிக்கத் தொடங்கினார்.

இதனால் பீதியடைந்த பொலிசார், விஷயங்கள் தவறாகிவிட்டன என்பதை அறிந்து, ராஜகுமாரியை இயல்பு நிலைக்கு கொண்டு வர கடுமையாக முயற்சி செய்தார்கள்.
கூடிய விரைவில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வீதியில் விழுந்து கிடந்த பெண் என குறிப்பிட்டே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விதிமுறைகளின்படி, வீதியில் கிடக்கும் ஒருவரை பொலிசார் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதித்தால், அதை தனது சட்டை நோட்டுப் புத்தகத்தில் எழுதி, வைத்தியசாலை காவல் நிலையத்திற்குத் தெரிவிக்க வேண்டும். ஆனால் இங்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. பொலிசார் ஏன் இப்படி நடந்து கொண்டார்கள் என்பது இதுவரை வெளிவரவில்லை.

இதேவேளை, வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சம்பவம் நடந்த நேரத்தில் தான் நாடாளுமன்ற பாதுகாப்பு கடமையிலிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். எனினும், நடிகை சுதர்மா யாரிடம் இந்த விவகாரத்தை தெரிவித்தார், பொறுப்பதிகாரிக்கு தெரியாமல் பொலிஸ் நிலையத்தில் ஒரு பெண்ணை தடுத்து வைத்து, அடித்துக் கொல்வது சாத்தியமா?  வீதியில் இறந்து கிடந்ததாக நாடகம் ஆடி வைத்தியசாலையில் அனுமதிப்பது சாத்தியமா என குற்றப்புலனாய்வுத்துறை விசாரித்து வருகிறது.

பணிப்பெண் உயிரிழந்த தகவல் பரவியதும், வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் ஊடகங்கள் வினவியபோது, பொலிசார் தாக்கி அவ்வாறான மரணம் நிகழவில்லையென கூறினார்.

இச்சம்பவத்துக்குப் பிறகு, பொலிஸ் விசாரணையில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் ராஜ் குமாரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்ததாக பொலிஸ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தாக்கப்பட்டதாக பொலிசார் எங்கும் கூறவில்லை. அதையெல்லாம் மறைக்க வெலிக்கடை பொலிஸார் கடுமையாக முயன்றனர். இதற்கு சில உயரதிகாரிகளின் ஆசியும் கிடைத்தது.

ராஜகுமாரி அடித்துக் கொல்லப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து, பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன, இந்த சம்பவத்தை ஆராய்ந்து அறிக்கையளக்க பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்தார்.

ராஜகுமாரியை கைது செய்தது முதல் அடித்துக் கொலை செய்வது வரை பல விவரங்களை ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வந்த சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர், அதையெல்லாம் உள்ளடக்கிய அறிக்கையை பொலிஸ்மா அதிபரிடம் கொடுக்கிறார்கள். இதன்படி, வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்படவுள்ளதுடன், ராஜ்குமாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்படவுள்ளதுடன், வெலிக்கடையில் இருந்து ஒரு கான்ஸ்டபிள் மற்றும் இரண்டு பெண் கான்ஸ்டபிள்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

இதற்கிடையில், ஜூன் 10 அன்று சுதர்மா நெத்திகுமார தனது வீட்டில் நடந்ததாகக் கூறப்படும் திருட்டு குறித்து காவல்துறையில் விரிவான புகார் அளித்தார். கடந்த மார்ச் 26ம் திகதி முதல் மே 3ஆம் திகதிக்குள் வீட்டில் திருட்டு நடந்ததாக பொலிசில் புகார் அளித்துள்ளார். தனது தங்கப் பொருட்கள், வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகவும், திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி 1,914,000 ரூபா எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பொருட்களை ராஜ் குமாரி உண்மையில் திருடினாரா? அல்லது வேறு ஏதாவது நடந்ததா என்பது தெரியவில்லை.

ராஜகுமாரியை கொடூரமாக தாக்கி கொலை செய்ய பயன்படுத்திய ரப்பர் குழாயையும் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் ஒரு மூலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கண்டுபிடித்துள்ளனர். ரப்பர் குழாய், ராஜகுமாரியினது என சந்தேகிக்கப்படும் சில முடிகள் மற்றும் இரத்த மாதிரி ஆகியவை தற்போது மரண விசாரணை அதிகாரியின் பாதுகாப்பில் உள்ளன. அந்த ரப்பர் குழாய் பகுதியில் சிக்கியிருந்த முடி மற்றும் ரத்த மாதிரிகள் ராஜ் குமாரியினுடையதா என்பது டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் தெரியவரும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊர்காவற்துறை விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

வன்னி மாவட்ட முன்னாள் எம்.பியும் அவரது செயலாளரும் பிணையில் விடுதலை

Pagetamil

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு முன்னாள் பணிப்பாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

Pagetamil

கிளிநொச்சியில் ஒருவருக்கு மலேரியா

Pagetamil

யாழ்ப்பாணத்தை சிங்கப்பூராக்க வர்த்தகர்களாலேயே முடியும்

Pagetamil

Leave a Comment