தனது வழக்கை விசாரிக்கும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பக்கச்சார்பாக செயற்பட்டதால், வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா தனது சட்டத்தரணிகள் ஊடாக சமர்ப்பித்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.
வாகன விபத்து சம்பவம் தொடர்பில் தனக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
வழக்கை விசாரிக்கும் நீதிபதி பக்கச்சார்பான முறையில் நடந்து கொண்டதால், வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுதாரர் கோரியிருந்தார்.
ஆனால் நீண்ட நேரம் உண்மைகளை பரிசீலித்து, தனது முடிவை அறிவித்த மேல்முறையீட்டு நீதிமன்ற பெஞ்ச், மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.