இந்தியா சமீபத்தில் நிலவிற்கு ஏவிய சந்திரயான் 3 ரொக்கட்டை தொடர்ந்து, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்தில், அவரது புதல்வனால் ஏவப்பட்ட ரொக்கட் பற்றிய கேள்விகளும், கிண்டல்களும் எழுந்திருந்தன.
தனது சகோதரனை பாதுகாக்க களமிறங்கியுள்ள நாமல், அது பற்றி பேசியுள்ளார்.
பண்டாரகமவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ராஜபக்ச இதனைத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்திலும் இது தொடர்பில் தன்னிடம் கேட்கப்பட்டதாகக் கூறினார்.
“தனியார் துறையின் திட்டமாக எனது சகோதரரால் ரொக்கெட் அனுப்பப்பட்டது.அதில் அரசு முதலீடு இருந்தால் அதை கோப் குழுவின் முன் கொண்டு வர வேண்டும்.
ஆனால் ஒரு தனியார் வர்த்தகர் செய்த முதலீட்டை நாங்கள் கேள்வி கேட்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முதலீடு குறித்து விசாரிக்க விரும்பினால், அது அவரைப் பொறுத்தது, அது அவருடைய பார்வை.
அரசு முதலீடு இருந்தால் அவர் சம்பவம் குறித்து விசாரணை செய்து கோப் குழுவின் முன் கொண்டு வரலாம்.
இந்த அறிக்கைகள் அரசியல் சூழலில் சேறு பூசுவதற்காக மட்டுமே செய்யப்படுபவை. இந்த சேறு பூசல்களால் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது.
அரசியல் தன்மையை சிதைத்து, அவர்களின் குழந்தைகளின் பெயர்களை சேதப்படுத்துவதன் மூலமும், அவர்களின் வீடுகளுக்கு தீ வைப்பதன் மூலமும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது” என கூறினார்.
நாட்டை சீரழித்த ராஜபக்ச ஆட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சியில், ராஜபக்சக்களிற்கு சொந்தமான சிங்கராஜ வன சொகுசு ஹொட்டல் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் தீயிட்டது குறிப்பிடத்தக்கது.