இலங்கையில் கொலைக்குற்றம் உள்ளிட்ட பயங்கரமான ற்றச்செயல்களில் ஈடுபட்ட பின்னர் இந்தியாவில் தலைமறைவாக இருந்த 3 ரவுடிகள் விதியின் விளையாட்டால் சிக்கியுள்ளனர்.
பெங்களூருவை சேர்ந்த பிரபல ரவுடி ஜெய் பரமேஷ் (42). அவர் மீது பல வழங்குகள் நிலுவையில் உள்ளன. கொலைக்குற்றச்சாட்டும் உள்ளது. அவர் மீதான வழக்குகள் நடந்து வரும் நிலையில், ஜெய் பரமேஷ் தலைமறைவாக இருந்தார்.
ஜக்கூரில் உள்ள விஸ்வ பிரக்ருதி கிரீன் வூட்ஸ் அபார்ட்மென்ட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவர் பதுங்கியிருப்பதாக மத்திய குற்றப்பிரிவின் பொருளாதார குற்றப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் (23) புதன்கிழமை அங்கு திடீர் சோதனை நடத்தினர்.
அங்கு வைத்து ஜெய் பரமேஷை பொலிசார் கைது செய்தனர்.
அதே குடியிருப்பில் மேலும் 3 ஆண்களும் தங்கியிருந்துள்ளனர். அவர்கள் யார் என பொலிசார் விசாரித்த போது, அவர்கள் திருதிருவென விழித்தனர். காரணம், அவர்களுக்கு கர்நாடக மாநில மொழியான கன்னடமோ, ஹிந்தியோ தெரிந்திருக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த பொலிசார் அவர்களை மேலும் விசாரித்த போது, மூவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும், பாஸ்போர்ட் அல்லது விசாக்கள் இல்லை என்றும் உடைந்த ஆங்கிலத்தில் பதிலளித்தனர். எனினும் மேலதிக விசாரணையில் அவர்களின் குற்றச் செயல்கள் தெரியவந்துள்ளன.
அவர்களையும் பொலிசார் கைது செய்து விசாரித்ததில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
கம்பஹாவைச் சேர்ந்த கசன் குமார சங்கா, கொழும்பு மாவட்டம் கடுவெல பகுதியை சேர்ந்த அமில நுவன், மற்றும் ரங்க பிரசாத் ஆகியோரே கைதாகினர்.
இலங்கையில் இவர்கள் மீது பல கொலை வழக்குகள் உள்ளன. சங்கா நான்கு கொலைகளிலும், நுவான் ஐந்து கொலைகளிலும், பிரசாத் இரண்டு தாக்குதல்/கொலை வழக்குகளிலும் சம்பந்தப்பட்டுள்ளனர்.
வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 13 மொபைல் போன்கள், இலங்கை முகவரிகள் கொண்ட விசிட்டிங் கார்டுகள், பஸ் டிக்கெட்டுகள், பேப்பர் கட்டிங், 23 ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையின் ஜெராக்ஸ் நகல்கள் சிக்கியுள்ளது எனக் போலீசார் தெரிவித்தனர்.
இவர்கள் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக எந்த விதமான ஆவணங்கள் விசா, பாஸ்போர்ட் இல்லாமல் படகின் மூலம் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர்.
தமிழ்நாட்டின் தனுஷ்கோடி-ராமேஸ்வரம் வழியாக 20 நாட்களின் முன் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர். பின்னர் சேலம் மாவட்டத்தில் தங்கியிருந்து, பெங்களூரை வந்தடைந்துள்ளனர்.
ஓமானில் கைது செய்யப்பட்டதாக நம்பப்படும் ஜலால் என்ற பெங்களுரைச் சேர்ந்த நபரின் உதவியுடன், இந்த 3 இலங்கையர்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக பொலிசார் நம்புகிறார்கள். கைதான பரமேஷ் முன்னர் ஜலாலின் அடியாளாக இருந்தவர்.
ஜலாலுடன் இலங்கையர்கள் எவ்வாறு தொடர்பு கொண்டனர் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை, விசாரணையில் அது தெரியவரும் என பொலிசார் தெரிவித்தனர்.