பேஸ்புக்கில் அறிமுகமான காதலியை தேடிச் சென்றவரையும், குறைந்த விலைக்குக் கையடக்கத் தொலைபேசியை விற்பதாக வெளியான பேஹ்புக் விளம்பரத்தை நம்பி வந்த மாணவனையும் துப்பாக்கியை காட்டி, தாக்கி கொள்ளையிட்ட திட்டமிட்ட குற்றக் கும்பலை கைது செய்ய எல்பிட்டிய பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த குழுவினர் பேஸ்புக்கில் போலி விளம்பரங்களை வெளியிட்டு, அதை நம்பி வருபவர்களிடம் பணம், தங்க நகைகள் உள்ளிட்ட பிற சொத்துக்களை கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
எல்பிட்டிய, வத்துரவில வீதியில் கடந்த 22ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் பேஸ்புக் காதலியை சந்திக்க வந்த இளைஞன் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டது. இவர் பலபிட்டிய பருத்தோட்டை பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடையவர்.
அத்துடன், பேஸ்புக்கில் காணப்பட்ட ஒரு விளம்பரத்தின்படி, 16 வயது மாணவர் ஒருவர் மலிவான மொபைல் போன் வாங்கச் சென்றபோது கொள்ளையடிக்கப்பட்டார். கோனாபீனுவல, பலுகஹவத்த பிரதேசத்தில் வசிக்கும் இவர், பிடிகல வத்தஹேன, கட்டப்பே கல்வெட்டுக்கு அருகில் வைத்து கொள்ளையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
22 வயதுடைய இளைஞன் சந்துனி என்ற பெண்ணை பேஸ்புக்கில் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் சந்தித்துள்ளார். இருவரும் பேஸ்புக்கில் கடலை போட்டு, நெருக்கமாகியுள்ளனர். எல்பிட்டிய வதுரவில வீதியிலுள்ள ஒரு இடத்தில் தன்னை சந்திக்குமாறு குறித்த இளைஞனை யுவதி அழைத்துள்ளார். அது இரவு நேரம். அந்த இளைஞன் ஓகஸ்ட் 22 அன்று இரவு நன்றாக உடையணிந்து யுவதியைச் சந்திக்கச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
தன்னை சந்திக்க வருமாறு யுவதி கூறிய இடத்திற்கு அந்த இளைஞன் சென்றபோது, அங்கு இரண்டு பேர் மட்டும் நின்று கொண்டிருந்தனர். இருவரும் இளைஞனை இரும்புக் கம்பியால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்து அவரிடம் இருந்த தங்க நெக்லஸ், மோதிரம் மற்றும் வளையல்களை கொள்ளையடித்துவிட்டு பணப்பையில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். அந்த இளைஞன் அளித்த புகாரின்படி, ரூ.708,000 மதிப்புள்ள சொத்துக்களை கொள்ளையடித்துச் சென்றதாகத் தெரிகிறது. .
இந்த இளைஞனை திட்டமிட்டு அந்த இடத்திற்கு அழைத்து வந்து கொள்ளையடித்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதே குழுவினரே பிடிகல பாடசாலை மாணவனை கொள்ளையடித்துள்ளதாக விசாரணைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எல்பிட்டிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக லொகுஹெட்டி தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் பக்கத்தில் வெளியான விளம்பரத்தின்படி, குறித்த மாணவன் குறைந்த விலையில் கையடக்கத் தொலைபேசியை கொள்வனவு செய்வதற்காக தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் கோனாபினுவலயிலிருந்து பிடிகல பகுதிக்கு வந்துள்ளார். துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி இருவரிடமும் கொள்ளையடித்ததாக மாணவன் பிடிகல பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவன் அணிந்திருந்த ரூ.185,000 பெறுமதியான தங்க நெக்லஸ் மற்றும் அப்போது அவர் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
இவ்விரு புகார்கள் தொடர்பாக நடத்திய விசாரணையில், அழகான இளம்பெண்ணின் புகைப்படத்துடன் காணப்பட்ட பேஸ்புக் பக்கத்துடன், பாதிக்கப்பட்ட இளைஞனே முதலில் தொடர்பு கொண்டதும், மொபைல் விற்பனை தொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் விளம்பரம் செய்த நபரை மாணவன் தொடர்பு கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேஸ்புக் கணக்குகளும் ஒரே தொலைபேசி எண் மூலமே உருவாக்கப்பட்டுள்ளதையும் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த கும்பலில் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும், மேலும் பலரை ஏமாற்றி ஆளரவமற்ற இடங்களுக்கு அழைத்து வந்து பணம், தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றதாகத் தெரிகிறது என்றும் விசாரணை நடத்தி வரும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவமானம் காரணமாக பலர் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.