அநுராதபுரம் ஜெயந்தி மாவத்தையில் உள்ள கதிரேசன் கோவிலுக்கு முன்பாக இன்று (21) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கலயா ஓயா, யாய 14 காலனி, சமகி மாவத்தையில் வசிக்கும் டபிள்யூ.பி.சஷிகா துலானி வீரசிங்க (36), அவரது 8 வயது மகள் திசானி பிரியங்சா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த தாய் ராஜாங்கனையிலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.
ஜெயந்தி சுற்றுவட்டத்தை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பேருந்து ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட போது, டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில், கெலகம, மதவாச்சியை சேர்ந்த 37 வயதுடைய டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்.