இந்தியாவின் 12 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தை பயன்படுத்தி யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில் கலப்பின மின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு இலங்கை மின்சார சபை (CEB) டெண்டர் கோரியுள்ளது.
முன்னதாக, இந்த திட்டத்தில் சீனாவின் நிதியுதவி பெறப்படவிருந்தது. எனினும், இந்தியாவின் கடுமையான எதிர்ப்பு காரணமாக, தற்போது சீனா கைவிடப்பட்டுள்ளது.
2021 ஜனவரியில், யாழ் மாவட்டத்துக்குட்பட்ட நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய இடங்களில் கலப்பின புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை சீன நிறுவனமான சினோசார்-எடெக்வின் நிறுவனத்திற்கு இலங்கை வழங்கியது.
ஆனால் சீனாவின் தலையீட்டை இந்தியா எதிர்த்ததை அடுத்து அந்த திட்டம் இரத்து செய்யப்பட்டது. இதையடுத்து சீனா கடுமையான அதிருப்தியடைந்தது. சீனத் தூதரகமும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திடம் கவலை தெரிவித்தது. இதனையடுத்து, சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டெண்டரை ரத்து செய்ய மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தீர்மானம் எடுத்தார்.
எவ்வாறாயினும், இந்தியா இந்த விடயத்தில் தீவிர ஈடுபாடு காட்டியதுடன், சீனாவை விலக்கி, திட்டத்தை நடைமுறைப்படுத்த மானியம் வழங்கியது.
பின்னர், கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், மூன்றாம் தரப்பினரின் ‘பாதுகாப்புக் காரணத்தால்’ இந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டது என்றும், மாலைதீவில் உள்ள 12 தீவுகளில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ மாலைதீவு அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் ட்வீட் செய்தது.
இந்தியாவின் மானியத்துடன் இத்திட்டத்தை நிறைவேற்ற புதிய டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதாக மின்சாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரண்டு தேசிய கட்டங்களையும் ஒன்றோடொன்று இணைக்கும் நோக்கத்துடன் இலங்கையின் எரிசக்தி துறையில் முதலீடு செய்ய இந்தியா ஏற்கனவே முன்வந்துள்ளது. முன்னணி இந்திய நிறுவனமான அதானி, மன்னார் மற்றும் பூநகரியில் சுமார் 350 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இரண்டு காற்றாலை மின் நிலையங்களைத் தொடங்குவதற்கான திட்ட அனுமதியைப் பெற்றுள்ளது. நிறுவனம் 2025 க்குள் திட்டத்தை செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது