வவுனியா அரசவிதைப் பண்ணையின் 3 வேப்பமரங்களை முறையற்ற விதமாக வெட்டியது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வடமாகாண விவசாய திணைக்களத்தின் கீழுள்ள வவுனியா அரச விதைப் பண்ணையில் 3 வேப்பமரங்களே அனுமதியற்ற விதமாக வெட்டப்பட்டுள்ளன.
அரசவிதைப்பண்ணை வளாகத்தில் அமைந்துள்ள, முகாமையாளரின் தங்கும் விடுதியில் வெட்டப்பட்ட வேப்பமரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
விதைப்பண்ணையில் வெட்டப்பட்ட வேப்ப மரங்களை முகாமையாளரின் விடுதியில் வைக்கப்பட்டதும் அனுமதியற்ற செயற்பாடாகும்.
கதவு நிலைகள் செய்யப்பட்டு பண்ணை முகாமையாளரின் விடுதியில் இருந்து வடமாகாண உள்ளக கணக்காய்வாளர் அலுவலக உத்தியோகத்தர்களால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பில் கணக்காய்வு திணைக்களத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
எனினும், மாகாண விவசாய திணைக்களத்தினரால் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென சுட்டிக்காட்டப்படுகிறது.
ஏற்கனவே ஒருமுறை அறுவடை செய்த பயரை பண்ணைக்கு வெளியில் கொண்டு செல்ல முயற்ற வேளை இக்கணக்காய்வு அதிகாரியிடம் மாட்டி கொண்டார். எனினும் அப்போதைய நிர்வாகம் (செயலாளர் உட்பட ) இப்பண்ணை முகாமையாளருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் சாதித்தது.
வவுனியா அரசவிதைப் பண்ணை முறையற்ற நிர்வாகத்தினால் தொடர்ந்து நட்டத்தில் இயங்கும் நிறுவனமாக காண்பிக்கப்பட்டு வந்தது. எனினும், வவுனியா பிரதி விவசாய பணிப்பாளராக சகிலா பானு பதவியேற்ற பின்னர், அது இலாபமீட்டும் நிறுவனமாக மாறியிருந்தது. அவர் பதவியேற்ற பின்னர், முன்னர் இடம்பெற்ற பல ஊழல் மோசடிகள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தினார்.
ஆயினும், ஊழல் மோசடிகளை வெளிப்படுத்திய அவரை மாகாண நிர்வாகத்தை விட்டு வெளியேற பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.