யாழ்ப்பாணம், சாவகச்சேரி லங்கா சதொச கிளையின் முன்னாள் முகாமையாளர், 74 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி சதொச விற்பனை நிலையத்தின் நாளாந்தப் பணத்தை ஆறு மாதங்களாக வங்கியில் செலுத்தாமல் தனது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தி இந்த மோசடியை செய்துள்ளதாக சதொச தலைமை அலுவலகம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
சாவகச்சேரி சதொச கிளையின் மற்றுமொரு ஊழியர் சதொச தலைமை அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதனை வெளிப்படுத்தியதை அடுத்து சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பின்னர், முகாமையாளர் சதொச தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில், பண மோசடி செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர், வேலையை விட்டுவிட்டு தலைமறைவாகியிருந்தார்.
இதையடுத்து, சதொச தலைவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள தனது மனைவிக்கு சொந்தமான வீட்டில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.