உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் அஞ்சு, பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் நஸ்ருல்லாவுடன் ஏற்பட்ட ஃபேஸ்புக் காதலலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு சென்று தங்கியுள்ளார்.
அவர் பாகிஸ்தானில் மகிழ்ச்சியாக இருப்பதாக குறிப்பிட்டார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் கைலோர் கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதாகும் அஞ்சு. இவர், பாகிஸ்தானைச் சேர்ந்த நஸ்ருல்லா என்ற 29 வயது இளைஞரோடு கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஃபேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளார். அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் வசித்து வந்த அஞ்சு, 30 நாட்கள் பாகிஸ்தானில் தங்குவதற்கான விசா பெற்று அந்நாட்டுக்குச் சென்றுள்ளார்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மேல் திர் மாவட்டத்தில் உள்ள குல்ஷோ என்ற கிராமத்தில் வசித்து வரும் நஸ்ருல்லாவை, அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்த அஞ்சு தற்போது நஸ்ருல்லாவின் வீட்டில் தங்கி இருக்கிறார்.
இந்தியாவில் இருந்து இளம்பெண் ஒருவர் வந்திருப்பது குறித்த தகவல் பரவியதால், பாகிஸ்தான் ஊடகங்கள் அது குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டன. இருவரும் காதலித்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இது குறித்து பொலிசார் விசாரித்த போது, நஸ்ருல்லா இல்லாமல் தன்னால் வாழ முடியாது என அஞ்சு குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு திருமணமாகவில்லையென ஆரம்பத்தில் பொலிசாரிடம் கூறிய அஞ்சு, பின்னர், கணவரிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அஞ்சு செல்லுபடியாகும் ஆவணங்களுடன் வந்துள்ளதாகவும், காதலன் வீட்டில் மகிழ்ச்சியாக வசிப்பதகவும் பொலிசார் தெரிவித்தனர்.
அத்துடன், அஞ்சு தங்கியுள்ள வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
நஸ்ருல்லா தற்போது அந்த வீட்டில் இல்லை. வேலைக்காக வெளியூர் சென்றுள்ளார்.
இந்நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் பேட்டி அளித்த நஸ்ருல்லா, “அஞ்சு பாகிஸ்தானுக்கு வந்திருக்கிறார். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற திட்டம் எங்களுக்கு இல்லை. அஞ்சுவின் விசா காலம் முடிவடைந்ததும் ஓகஸ்ட் 20ஆம் தேதி அவர் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புவார். எங்கள் வீட்டில் உள்ள தனி அறையில், எங்கள் வீட்டின் பெண்களுடன் அவர் தங்கி உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, தங்களுக்குள் இருப்பது நட்புதான் என்றும், காதல் அல்ல என்றும் அவர் கூறி இருக்கிறார். அஞ்சுவிடம் மாவட்ட காவல் அதிகாரி முஸ்டாக் நேற்று விசாரணை நடத்தியதாகவும், அவரது பயண ஆவணங்களை பரிசோதித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
குல்ஷோவில் உள்ள பெரும்பாலான மக்கள் தீவிரமான மதப் பற்று உள்ள பஷ்டூன் சமூகத்தினர் என்றும், அஞ்சு பத்திரமாக இந்தியாவுக்கு திரும்ப வேண்டும்; இந்த விவகாரத்தால் தங்கள் நாட்டுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என்று அவர்கள் கருதுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அஞ்சு பத்திரமாக இந்தியா திரும்புவார் என்று ராஜஸ்தானில் உள்ள அவரது கணவர் அர்விந்த் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.