ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசின் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி கறுப்பு யூலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் பொது நூலகத்திற்கு அருகாமையில் இன்று மாலை இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன் போது கறுப்பு யூலை நினைவேந்தல் பொதுச் சுடரினை மாவீரரின் தந்தையொருவர் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து ஏனையவர்களும் சுடரேற்றி அஞ்சலி செய்தனர்.
மேலும் நினைவேந்தல் பதாகையில் 1983 கறுப்பு யூலை தமிழினப் படுகொலையானது சிறிலங்கா அரசாங்கத்தால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்றும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளையும் நாடு முழுவதும் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களையும் நினைவுகூறுகிறோம் எனவும் 1948 முதல் இன்றுவரை நடைபெற்ற நடைபெறுகின்ற இன அழிப்பை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றவாறாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் ஊடகப் பேச்சாளர்களாக சட்டத்தரணி சுகாஷ், சட்டத்தரணி காண்டீபன் உட்பட கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.