மெக்ஸிகோவில் மதுபான விடுதிக்குள் பெண்களிடம் தவறாக நடந்தவர் வெளியேற்றப்பட்டதையடுத்து ஆத்திரத்தில், மதுபான விடுதிக்கு தீ வைத்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் எல்லை நகரமான அரிசோனாவின் சான் லூயிஸுக்கு அருகில் அமைந்துள்ள சான் லூயிஸ் ரியோ கொலராடோவில் உள்ள மதுபான விடுதியில் சனிக்கிழமை (ஜூலை 22) அதிகாலையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் அமெரிக்க குடியுரிமையுள்ள பெண்ணும் உள்ளடங்குவதாக சனிக்கிழமையன்று ஒரு செய்தி மாநாட்டின் போது சோனோராவின் சட்டமா அதிபர் குஸ்டாவோ ரோமுலோ சலாஸ் சாவேஸ் தெரிவித்தார்.
அந்த அறிக்கையின்படி, தீயை மூட்டுவதற்கு காரணமான சந்தேக நபர் அதிக போதையில் இருந்ததாகவும், மதுக்கடையில் இருந்த பெண்களிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் அவர் வெளியேற்றப்பட்ட பின்னர், மதுபானக் கூடத்தின் கதவுகளில் எரியும் பொருளை வீசினார்.
தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட பொருள் சட்டமா அதிபர் அலுவலகத்தால் “மொலோடோவ் காக்டெய்ல்” என்று விவரிக்கப்பட்டது.
பிரதான சந்தேகநபர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சனிக்கிழமையன்று அறிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்குள் மெக்சிகோவில் நடந்த இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
முன்னதாக, ஜூலை 10 அன்று மத்திய மெக்சிகோவில் உள்ள ஒரு பரந்த மொத்த சந்தையில் ஒரு சந்தேகத்திற்குரிய தீ தாக்குதல் குறைந்தது ஒன்பது பேரின் உயிரைக் கொன்றது.
மோலோடோவ் காக்டெய்ல் என்றால் என்ன?
மொலோடோவ் காக்டெய்ல் என்பது கையால் எறியப்படும் ஆயுதம் ஆகும். நம்மூர் பெற்றோல் குண்டை போன்றது.
சுலபமாக தயாரிக்கலாம் என்பதால், குற்றவாளிகள், கலகக்காரர்கள், குண்டர்கள், நகர்ப்புற கெரில்லாக்கள், பயங்கரவாதிகள் இதனை பயன்படுத்துகிறார்கள்.