நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 03 மனுக்களை செப்டம்பர் 27ஆம் திகதி மீள விசாரணைக்கு அழைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுக்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சனத் நிஷாந்த மன்றுக்கு அழைக்கப்பட்டார்.
சட்டமா அதிபர் தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், இந்த முறைப்பாடு தொடர்பில் குரல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும், அதனை அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்தினர் முன்னிலையில் மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
அப்போது, மனுவொன்றை சமர்ப்பித்திருந்த இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இவ்வாறான விசாரணையின்றி இந்த மனுவை பராமரிப்பதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்தார்.
அதன்படி, மனுவை செப்டம்பர் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது.
இந்த மனுக்களை பிரியலால் சிறிசேன மற்றும் விஜித குமார ஆகிய இரு சட்டத்தரணிகள் மற்றும் இலங்கை சிரேஷ்ட அதிகாரிகள் சங்கம் முன்வைத்துள்ளனர்.
ஓகஸ்ட் 23, 2022 அன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசிய சனத் நிஷாந்த, மக்கள் போராட்ட செயற்பாட்டாளர்களுக்கு பிணை வழங்குவதில் நீதவான்கள் செயற்பட்ட விதத்தை விமர்சித்திருந்தார்.
அதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகவும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.