தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கவும், இரவு நேர பாடசாலை திட்டத்தை தொடங்கவும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நடிகர் விஜய் முடிவு செய்திருப்பதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.
விஜய் மக்கள் இயக்கம் மூலம் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இலவச மதிய உணவு, முக்கிய தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாளில் மரியாதை செலுத்துவது, மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூராட்சி அளவில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கியது உள்ளிட்ட செயல்பாடுகளால், விஜய் தனது அரசியல் நகர்வை தொடங்கி விட்டார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமீப நாட்களாக விஜய் மக்கள் இயக்கம் மூலம் எந்த திட்டத்தை தொடங்கினாலும் நடிகர் விஜய், 234 தொகுதிகள்என குறிப்பிட்டு திட்டமிடுவது, ஒருவேளை சட்டப்பேரவை தேர்தலை விஜய் குறிவைத்திருக்கிறாரா? என்ற கேள்வி விவாதத்துக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், 234 தொகுதிகளிலும் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க நடிகர் விஜய் திட்டமிட்டிருந்தார். அதன்படி, நேற்று முன்தினம் சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இதில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்ட தலைவர்கள், இளைஞரணி தலைவர்கள், மாணவரணி, மகளிர் அணி நிர்வாகிகள் என 350 பேர் கலந்து கொண்டனர்.
கடந்த மாதம் மாணவ, மாணவிகளை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில், மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் ஒருங்கிணைத்து நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து விழாவை சிறப்பாக நடத்தியதற்காக, நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த கூட்டம் இருந்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
2வது நாள் கூட்டம்: அதேவேளையில், அரசியல் களம் குறித்தும், மக்களின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்பதுகுறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், 2வது நாளாக நேற்று சென்னை, ஈரோடு, மதுரை, சேலம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திலும் நிர்வாகிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்த விஜய், தங்களது குடும்பத்தை கவனித்து கொண்டே நற்பணியில் ஈடுபட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். தமிழகத்தின் ஒரு சில இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு நேர பாடசாலை திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த விஜய் முடிவு செய்திருப்பதாகவும், காமராஜர் பிறந்தநாளில் அந்த திட்டம் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர். அதற்கான இடமும், செலவும் விஜய் மக்கள் இயக்கமே ஏற்கும் எனவும் விஜய் தெரிவித்ததாக நிர்வாகிகள் கூறினர்.
அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்துகொண்டு, பின்னர் அரசியலில் ஈடுபடுவது குறித்த அறிவிப்பை வெளியிட விஜய் திட்டமிட்டுள்ளதாக விஜய் மக்கள் இயக்க வட்டாரத் தில் கூறப்படுகிறது.