தயாரிப்பாளர் ‘ஒய் நாட்’ சஷிகாந்த் ‘டெஸ்ட்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிக்கின்றனர். மீரா ஜாஸ்மின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதில் இணைந்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு வெளியான ‘விஞ்ஞானி’ படத்தில் கடைசியாக அவர் நடித்திருந்தார். பின் மலையாளத்தில் நடித்தாலும் 9 வருடமாக தமிழ் சினிமாவுக்கு வரவில்லை.
ரீ- என்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின் கூறியதாவது-
மாதவனுடன் ‘ரன்’, ‘ஆய்த எழுத்து’ படங்களில் நடித்திருக்கிறேன். சித்தார்த்தும் ‘ஆய்த எழுத்து’ படத்தில் நடித்திருந்தார். அவர்களுடன் ‘டெஸ்ட்’ படத்தில் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி. நயன்தாராவுடனும் இந்தப் படத்தில் நடிப்பது உற்சாகமாக இருக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடிப்பது, எனக்கு கிடைத்த ஆசிர்வாதம். இதற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். இடையில் சில காலம் என் தனிப்பட்ட காரணங்களுக்காக நடிக்கவில்லை. இப்போது மீண்டும் நடிப்பைத் தொடங்கி இருக்கிறேன். இவ்வாறு மீரா ஜாஸ்மின் தெரிவித்துள்ளார்.