சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் 15 வது தெருவில் வசித்து வருபவர் சின்னத்திரை நடிகை லதா ராவ். இவரது கணவர் ராஜ்கமல். சின்னத்திரை நடிகரான ராஜ்கமலும், லதா ராவும் சேர்ந்து பல்வேறு நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளனர்.
லதா ராவுக்கு அதே பகுதியில் சொந்தமான பங்களா ஒன்றுஉள்ளது. இந்த பங்களாவை சின்னத்திரை மற்றும் சினிமா படப்பிடிப்புக்கு வாடகைக்கு விட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று காலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு பணிப்பெண் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, டிவி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் திருடு போய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து லதா ராவுக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
பின்னர், லதா ராவ் திருட்டு சம்பவம் குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல், அதேபகுதியில் பாஜக நிர்வாகி பொன்.பிரபாகரன் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மதுரவாயல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.