முத்துராஜா யானை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டாது என தாய்லாந்து சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யானையை மீண்டும் தருமாறு இந்நாட்டு மதத்தலைவர் ஒருவர் விடுத்திருந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அந்நாட்டு அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முத்துராஜா அல்லது ‘சக்சூரின்’ எனப்படும் யானை தாய்லாந்து மன்னரின் காவலில் இருப்பதால், அது குறித்து மேலும் விவாதிக்க முடியாது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்து அரசின் நன்கொடையாக, கடந்த 22 ஆண்டுகளாக இலங்கையில் இருந்த 30 வயதான முத்துராஜா யானையை தாய்லாந்துக்கு மீண்டும் கொண்டு செல்ல அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.
நோய்வாய்ப்பட்டிருந்த யானைக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட முத்துராஜா யானை லம்பாங் மாநிலத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 30 நாட்கள் முத்துராஜா தனிமைப்படுத்தப்ப்டிருக்கும்.
முத்துராஜா சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், முத்துராஜா மிகவும் உற்சாகமான குணத்தை வெளிப்படுத்துவதாகவும், அந் நாட்டு மொழியுடன் அதிக ஈடுபாடு கொண்டுள்ளதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
முத்துராஜா போதுமான அளவு சாப்பிடுகிறது மற்றும் நடமாடுகிறது. உதவியின்றி நின்று ஓய்வெடுக்கிறது. இருப்பினும், ஆரம்ப பரிசோதனையின் போது, ஒரு கால்நடை மருத்துவர் பல உடல்நலப் பிரச்சினைகளைக் கண்டறிந்தார்.
முத்துராஜாவின் முன் இடது கால் வளைக்க முடியாததாக காணப்படுகிறது. இடுப்பின் இருபுறமும் புண்கள் இருந்தன. கண்புரை வலது கண்ணை மறைத்தது.
எனினும் இலங்கையில் இருந்து முத்துராஜாவை அழைத்துச் செல்ல வந்த கால்நடை வைத்தியர் குழுவின் மூத்த வைத்தியர் ஒருவர் இன்று தனது முகநூல் பதிவில் முத்துராஜாவை இலங்கையில் இருந்து அழைத்துச் செல்லும் போது முத்துராஜாவின் 90% சீழ் கட்டிகள் குணமாகியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
உள்ளங்கால் அல்லது வாலில் காயங்கள் எதுவும் இருக்கவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்காக தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் கால்நடை வைத்திய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், தாய்லாந்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மற்ற இரண்டு யானைகள் குறித்தும் அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
குறித்த யானைகளின் உடல்நிலை குறித்து ஆராய்வதற்காக கால்நடை வைத்தியர்கள் உள்ளிட்ட குழுவொன்று எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந் நாட்டிற்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தாய்லாந்து ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.