நுவரெலியா, இராகலை பிரதேசத்தில் இன்று (05) காலை 9.45 மணியளவில் இடம்பெற்ற திடீர் தீவிபத்தில் 20 இற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.
இதனால் சுமார் 15 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
6ஆம் இலக்க நெடுங்குடியிருப்பிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
பொலிஸாருக்கும், தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கப்பட்டது. எனினும், அப்பகுதி மக்கள் மாத்திரம் ஒண்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினர்.
தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும், பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன என்று மக்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களை தோட்ட வைத்தியசாலையில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், அனர்த்த முகாமைத்துவ நிலையம், நுவரெலியா பிரதேச சபை ஆகியன ஊடாகவும் வழங்க நடவடிக்ககைள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை. நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மின்கம்பிகள் அறுந்து விழுந்ததில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்புவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.