யாழ் மாவட்ட மேலதிக நீதிவான் நளனி சுபாஸ்கரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர், சங்கத்தின் சார்பில் எழுதிய கடிதத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றை காரணம் காட்டிய அந்தக் கடிதம். அமைச்சர்கள் விஜயதாஸ ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி
சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் பிரதியிடப்பட்டமை
விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தக் கடிதம் யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினுடையது அல்ல என்று அதன் தலைவர் விளக்கக் கடிதம் ஒன்றை நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக ஸ்ரனிஸ்லாஸ் செலஸ்ரின் உள்ளார்.
மோசடியாகத் தயாறிக்கப்பட்ட அற்றோனித் தத்துவ பத்திரம் ஒன்று தொடர்பில் சட்டத்தரணி எஸ்.செலஸ்ரின் அண்மையில் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அந்தப் பத்திரம் தனது எழுதுநரான யுவதியால் தயாரிக்கப்பட்டது என்றும் தன்னிடம் ஏமாற்றி கையொப்பம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
பிரித்தானியாவில் வசிக்கும் ஒருவரின் அற்றோனித் தத்துவ பத்திரம் ஒன்று தொடர்பான விசாரணை இது. இந்த அற்றோனித்தத்துவத்தை மற்றொருவர் பதிவுக்காக கொடுத்த பின்னர், பெற்றுக்கொள்வதற்காக சென்ற அல்லது அனுப்பி வைக்கப்பட்ட, செலஸ்ரினின் எழுதுநரான யுவதியே கைது செய்யப்பட்டார்.
செலஸ்ரினின் வாக்குமூலத்துக்கு அமைய, அவரது எழுதுனரான யுவதி கைது செய்யப்பட்டு, ஜூன் 24ஆம் திகதி யாழ் மாவட்ட மேலதிக நீதிவான் முன் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 8 பேர் அளவில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஜூன் 26ஆம் திகதி சட்டத்தரணிகள் சங்கத்தை கூட்டிய செயலாளர் எஸ்.செலஸ்ரின், யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் தொடர்பில் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு வழங்க வேண்டுமென பல குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.
எனினும் நிலுவையில் உள்ள வழக்குத் தொடர்பில் அவ்வாறு முறைப்பாடுகளை முன்வைக்க முடியாது, அது சட்டத்தரணிகள் சங்கத்தின் தார்மீகமும் கிடையாது என்று சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
எனினும் மறுநாள் ஜூன் 27ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தலைப்பில் யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் என்ற வகையில் அனுப்பப்படும் கடிதம் எனக் கூறி நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதன் பிரதிகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ரா ஜபக்ச, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறினால் யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் அந்த மன்றில் முன்னிலையாகாமல் புறக்கணிப்பார்கள் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் கடிதத் தலைப்பில் செயலாளர் மட்டும் ஒப்பமிட்டு அனுப்பிய இந்தக் கடிதம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரிடம் கேட்டிருந்தது.
அத்துடன், நீதி சேவையுடன் தொடர்புடைய அலுவலர் ஒருவர் மீதான முறைப்பாட்டை முறையற்ற வகையில். அரசியல் தலைவர்களுக்கு அனுப்பியது தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் இந்தக் கடிதம் யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினுடையது அல்லது என்று அதன் தலைவர், மூத்த சட்டத்தரணி எஸ்.தவபாலன் விளக்கக் கடிதம் ஒன்றை நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.