திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சூரங்கள் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் மற்றுமொரு சிறுமி உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
ஹஜ் பெருநாள் தினமான நேற்று (29) வியாழக்கிழமை மாலை தம்பலகாமம் -அரபா நகரில் இருந்து உறவினர்களின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் தாய் தந்தை இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் பயணித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் பெட்ரோல் தாங்கியில் ஐந்து வயது சிறுமியை வைத்துக்கொண்டு பயணித்துக் கொண்டிருந்த போது சிறுமிக்கு தூக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் சிறுமி ஓரமாக சாய்ந்து உள்ளார்.
இதனையடுத்து மோட்டா் சைக்கிளை செலுத்திக் கொண்டிருந்த தந்தை, சிறுமியை பிடிக்க முற்பட்டபோது, மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இதேவேளை சிறுமியின் தலையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார். தந்தை , தாய் ஒன்றறை வயது கைக்குழந்தை ஆகியோர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு உயிரிழந்த சிறுமி தம்பலகாமம்- அரபா நகர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.
உயிரிழந்த சிறுமியின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து-தொடர்பில் விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-அப்துல்சலாம் யாசீம்-