சிறைக்காவலர் அணியும் சீருடையை அணிந்துகொண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து தப்பியோடிய மரண தண்டனை கைதி, தனது மனைவியை கொலை செய்யும் நோக்கத்துடனேனே தப்பிச் சென்றதாக விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளார்.
சிறைச்சாலை காவலர் சீருடை இந்த கைதிக்கு சிறைச்சாலையில் தையல் அணியில் பணிபுரியும் மற்றொரு கைதியால் வழங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற மரண தண்டனைக் கைதியிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக நேற்று (29) பூஸ்ஸ சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலை விசாரணைக் குழுவினரின் விசாரணைகளின் போதே கைதி இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையின் தையல் குழுவைச் சேர்ந்த மற்றுமொரு கைதியே அவருக்கு சிறைச்சாலை காவலர் சீருடை தைத்து கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மனைவியை கொல்ல வேண்டுமென்ற வெறியில் வெலிக்கடை சிறைச்சாலையை விட்டு வெளியேறினாலும், அதன் பின்னர் என்ன செய்யப்போகிறார், எங்கு செல்வது என்பது குறித்து உறுதியான முடிவு எடுக்கவில்லை என அவர் கூறியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறைக்காவலர் சீருடை அணிந்து கொண்டு சிறைச்சாலையின் பிரதான வாயில் ஊடாக வெளியேறிய இந்த கைதி மருதானை புகையிரத நிலையத்தில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டார்.
இந்த கைதிக்கு 2015 ஆம் ஆண்டு கம்பஹா மேல் நீதிமன்றத்தால் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் சுமார் 42 வயதுடையவர் என்றும் பன்னல, உலகொடுவெல்ல பிரதேசத்தில் வசித்து வந்தவர் என்றும் சிறைச்சாலை ஆவணங்கள் தெரிவிக்கின்றன.