வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரண தண்டனை கைதியொருவர் இன்று (25) சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் சீருடையை ஒத்த ஆடைகளை அணிந்து சிறையிலிருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.
சிறையிலிருந்து வெளியேறி மருதானை புகையிரத நிலையத்திற்கு வந்து ரயிலில் ஏறி தப்பிச் செல்ல முயன்ற போது, அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த கைதி இன்று (25) ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியளவில் சமய நிகழ்ச்சிக்காக சிறைக்கூண்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர் கவனமாக அங்கிருந்து தப்பிச் சென்று சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் சீருடையை ஒத்த ஆடை அணிந்து கொண்டு, காவலர்களிற்கு தவறான தகவல்களை கூறி, பிரதான வாயிலின் ஊடாக தப்பிச் சென்றுள்ளார்.
அவரது நடத்தையில் சந்தேகமடைந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், அவரை விரட்டிச் சென்றனர். மருதானை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் நின்று கொண்டிருந்த சந்தேக நபரை கைது செய்தனர்.
இவர் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் 06.03.2015 அன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த கைதி பன்னல வாவெகொடுவ, உலகொடுவெல்ல பகுதியைச் சேர்ந்த (42) வயதுடையவர் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த கைதியை வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து உயர் பாதுகாப்பு புஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.