இம்மாத இறுதியில் 60 வயதை கடந்த பெருமளவான வைத்தியர்கள் ஓய்வு பெறவுள்ளதாலும், மருந்து வாங்க போதிய நிதியின்மை மற்றும் மருந்து தட்டுப்பாடு காரணமாகவும் அரசாங்க வைத்தியசாலையின் செயற்பாடுகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக வரையறுக்கப்பட்டுள்ளதால், 200 சிறப்பு மருத்துவர்கள், 200 பொது மருத்துவர்கள், 250 அரசுப் பதிவு மருத்துவர்கள், 50 பல் மருத்துவர்கள் இம்மாதம் 30ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ளதாக சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பதிவு செய்யப்பட்ட வைத்தியர்கள் 650 பேர் பிராந்திய வைத்தியசாலைகளில் பணிபுரிவதாகவும், அவர்களில் சுமார் 350 பேர் இம்மாதம் 30 ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளமையினால் அந்த வைத்தியசாலைகளை நடத்துவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, மருத்துவர்களுக்கான வயது வரம்பை 63 ஆக நீட்டித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டது, பின்னர் அரசு கொள்கை முடிவின் அடிப்படையில் சுற்றறிக்கையை ரத்து செய்தது.
புதிய சுற்றறிக்கையை இரத்து செய்யவும், வயதை 63 ஆக அதிகரிப்பதற்கான சுற்றறிக்கையை மீள அமுல்படுத்தவும் விசேட வைத்தியர்கள், வைத்தியர்கள், பல் வைத்தியர்கள் மற்றும் அரசில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் அடங்கிய குழு நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதுடன், தற்போது அது நீதிமன்றில் ஆராயப்பட்டு வருகின்றது.
இதேவேளை, பயிற்சியை நிறைவு செய்த சுமார் 1400 வைத்தியர்களுக்கு கடந்த ஏப்ரலில் பயிற்சியின் பின்னரான நியமனங்கள் வழங்கப்பட்டிருந்ததுடன், சுமார் 300 வைத்தியர்களுக்கு நியமனக் கடிதங்கள் கிடைக்கவில்லை எனவும் அறியமுடிகின்றது.
நியமனத்தை ஏற்காத பலர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் பல வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறையால், முக்கிய அறுவை சிகிச்சைகளை கூட நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நோயாளிகள் கூறுகின்றனர்.
வைத்தியர் பற்றாக்குறை மற்றும் மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தாவிடம் சிங்கள ஊடகமொன்று கேள்வியெழுப்பிய போது, வைத்தியர்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறை வைத்தியசாலையை நடத்துவதற்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக குறிப்பிட்டார்.