’ரோஜா’ படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம், பாடகி மின்மினி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். இந்த பாடலை பாடியதற்காக அவர் பெரிய விலை கொடுத்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
அந்த பாடலை பாடியதால் இசையமைப்பாளர் இளையராஜா தனக்கு வாய்ப்பு கொடுப்பதை நிறுத்திவிட்டதாக பாடகி மின்மினி தெரிவித்துள்ளார்.
1992ஆம் ஆண்டு வெளியான ‘மீரா’ படத்தின் மூலம் இளையராஜாவால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டவர் பாடகி மின்மினி. அதன் பிறகு ‘தேவர் மகன்’ படத்தில் இடம்பெற்ற ‘மாசறு பொன்னே வருக’ என்ற பாடலை பாடகி ஸ்வர்ணலதாவுடன் சேர்ந்து பாடியிருந்தார். 1992ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான ‘ரோஜா’ படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
இந்த பாடலுக்குப் பிறகு இளையராஜாவிடம் பணிபுரியும் வாய்ப்பை இழந்துவிட்டதாக பாடகி மின்மினி சமீபத்தில் மலையாள ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சின்னச்சின்ன ஆசை பாடல் வெற்றியடைந்த பின்னர் நிறைய வாய்ப்பு வந்திருக்குமென பலரும் நினைக்கிறார்கள். அப்படியல்ல. அதன் பின்னர் சிறிதுகாலம் பாடும் வாய்ப்பில்லாமல் இருந்தேன். அப்போது தினமும் இளையராஜாவின் ஸ்ரூடியோவுக்கு பாடல் பதிவுக்காக சென்று கொண்டிருந்த காலம்.
ஒரு பாடல் பதிவுக்காக ஸ்டுடியோவுக்கு போனபோது இளையராஜா, ‘அவர் வேறு ஒரு இடத்தில் பாடத் தொடங்கிவிட்டார். அவர் அங்கேயே தொடர்ந்து பாடட்டும்’ என்று கூறினார். அப்போது ஸ்ரூடியோ மைக் ஓன் செய்யப்பட்டிருந்தது. அதை எலலோரும் கேட்டனர். இதனால் மனமுடைந்து அழுதேன். அங்கு இருந்த பாடகர் மனோ தேற்றி ஆறுதல் கூறினார் என மின்மினி கூறியுள்ளார்.
அந்த நிகழ்வுக்குப் பிறகு இளையராஜா தன்னை பாடுவதற்கு அழைக்கவே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை இதுவரை தெரிவிக்கவில்லையென்றும், பேட்டியில் கேட்கப்பட்டதால் குறிப்பிட்டதாக கூறினார்.
இத்தனை ஆண்டுகளாக அவர் அதை வெளிப்படுத்தாததற்குக் காரணம், பழம்பெரும் இசைக்கலைஞரைப் பற்றி யாரும் எதிர்மறையாகச் சிந்திப்பதை விரும்பவில்லை என்று மின்மினி பகிர்ந்து கொண்டார்.
அவரது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில், மின்மினி தனது குரல் வள்தை இழந்தபோது பாடுவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டியிருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, தனது குரலை மீட்டெடுத்து 2015 இல் மீண்டும் திரைப்படங்களில் பாடிதாக மின்மினி குறிப்பிட்டார்.
குரல் வளத்தை இழந்தபோது ஒப்பந்தமான அனைத்து பாடல் பதிவுகளையும் ரத்து செய்வதாகவும், ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டும் பதிவை ரத்து செய்ய மறுத்துவிட்டார். பாரதிராஜாவின் கருத்தம்மா படத்தில் பச்சை கிளி பாடும் பாடலை இப்படித்தான் பாடினார். அந்த பாடலை தான் பாடவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் அதையொட்டி, தான் ஒவ்வொரு வார்த்தையையும் பாடலின் டியூனில் சொன்னபோது பதிவு செய்யப்பட்டது. முழுப் பாடலும் இப்படித்தான் எடுக்கப்பட்டது என்று பகிர்ந்து கொண்டார்.