யாழ்ப்பாணம், நல்லூர் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தினை பொதுமுகாமைத்துவம் ஒன்றினை அமைத்து நிர்வகிப்பதற்கு ஆவணை செய்யுமாறு கோரி மகஜர் ஒன்று நல்லூர் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த பூசகர்களிடையே நீண்டகாலமாக முரண்பாடு காணப்பட்ட நிலையில் இவ் வருட மகோற்சவத்தினை யார் சுழற்சிமுறையில் நடத்துவதென இரு பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக கடந்த 9ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக வேண்டிய மகோற்சவம் உரிய நேரத்தில் ஆரம்பமாகாது தடைப்பட்டு பின் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய மீள மாலையே ஆரம்பமானது.
பலகாலமாக ஆலயத்தில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக ஆலய மகோற்சவ உபயகார்கள், ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளும் பொதுமக்கள் இணைந்து, வீரமாகாளி அம்மன் ஆலயத்தினை நிர்வகிப்பதற்கு என பொது முகாமைத்துவத்தினை அமைக்குமாறும் எதிர்வரும் ஆண்டுகளில் திருவிழாவினை தடையின்றி நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறும்கோரி நல்லூர் பிரதேச செயலாளர் எழிலரசி அன்ரன் யோகநாயகத்திடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மகஜர் தொடர்பில் நல்லூர் பிரதேச செயலகத்தினால் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளும் 3 குடும்பங்களிடமும் தற்போது தனித்தனியாக அபிப்பிராயம் பெறப்படவுள்ளது. ஆலய மகோற்சவம் முடிந்ததும் பொதுமுகாமைத்துவத்தினை அமைப்பது தொடர்பில் ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
பூசகர்களுக்கிடையில் உருவாகிய முரண்பாட்டால் மகோற்ச ஆரம்ப தினத்தில் ஆலயம் பூட்டப்பட்டு ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெறாது மக்கள் ஆலயத்திற்கு வெளியில் அமர்ந்திருந்த அவலம் நடைபெற்றதால் இது போல் மீண்டும் ஒருமுறை நடவாது இருக்க உரிய அதிகாரிகள் ஆவணை செய்யவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.