‘ஆதிபுருஷ்’ படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் பொருந்தவே இல்லை என்று கூறிய இளைஞர் ஒருவரை பிரபாஸ் ரசிகர்கள் அடித்து உதைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் இன்று (ஜூன் 16) உலகமெங்கும் வெளியாகியுள்ளது.
படம் வெளியாகும் திரையரங்க வாசல்களில் காலை முதலே பிரபாஸ் ரசிகர்கள் வெடிவெடித்து, ஆடிப் பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் ‘ஆதிபுருஷ்’ படம் பார்த்துவிட்டு வெளியே வந்த இளைஞர் ஒருவர், அங்கு குழுமியிருந்த செய்தியாளர்களிடம் மைக்கில் ‘படத்தின் கிராபிக்ஸ் பிளேஸ்டேஷன் வீடியோ கேம் போல இருக்கிறது. அனுமன், பின்னணி இசை தவிர்த்து படத்தில் ஒன்றுமே இல்லை என்று கூறினார். மேலும் பிரபாஸ் குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், “ராமராக பிரபாஸ் பொருந்தவே இல்லை. ’பாகுபலி படத்தில் அவர் ஒரு அரசர் போல இருந்தார். அதனால் தான் இப்படத்தில் அவரை தேர்வு செய்தனர். ஆனால் அவரை இயக்குநர் ஓம் ராவத் சரியாகக் காட்டவில்லை’ என்று கூறினார்.
#Adipurush – #Prabhas fans beating the public for giving genuine review 🙄
Worst behavior 👍#AdipurushTickets #AdipurushOnJune16pic.twitter.com/zV8waEWm4z— VCD (@VCDtweets) June 16, 2023
அவர் பேசி முடிப்பதற்குள் அங்கு குழுமியிருந்த ரசிகர்கள் சிலர், அவர் மீது பாய்ந்து அவரை அடித்து உதைக்க தொடங்கிவிட்டனர். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அனுப்பி வைத்தனர். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.