கல்முனை மாநகர சபைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான புதிய மேலதிக வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்காமல், இம்மாத இறுதிவரை தாமதப்படுத்துமாறு கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அனைத்து தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள், முகாமையாளர்கள் மற்றும் ஆசிரியர்களை அறிவுறுத்தி அவர் வெளியிட்டுள்ள விஷேட அறிவித்தலில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
பல்வேறு அர்ப்பணிப்புக்கள் மற்றும் சிரமங்களுக்கு மத்தியில் க.பொ.த சாதாரணதர பரீட்சையினை நிறைவு செய்திருக்கின்ற மாணவர்களும் பெற்றோர் மற்றும் கல்விச் சமுகத்தினரும் எம்மிடம் சுட்டிக்காட்டியமைக்கு அமைவாக, தங்களது கல்வி நிறுவனங்களினால் புதிய க.பொ.த உயர் தரத்திற்கான மேலதிக நேர வகுப்புக்களை மிக அவசரமாக ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக அறிய முடிகின்றது.
க.பொ.த உயர்தர கல்வியானது மாணவர்களது முற்றுமுழுதான எதிர்காலத்தினை தீர்மானிக்கின்ற மிகப் பிரதான சந்தர்ப்பமாக காணப்படுகின்றது என்பதனை தாங்களும் அறிந்த வகையில், உயர்தர கல்விக்கான தத்தமது துறைகளை தேர்வு செய்வதற்காக மற்றும் உரிய தயார்படுத்தல்களுக்காக மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும்
போதிய கால அவகாசமும் சுதந்திரமும் வழங்கப்பட வேண்டியது இன்றியமையாததாகும்.
எனவே, மேற்கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையில் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட தனியார்
கல்வி நிலையங்கள் அனைத்தும் எதிர்வரும் 2023.06.30 ஆம் திகதி வரை தங்களது கல்வி நிலையங்களில் புதிய க.பொ.த உயர்தரத்திற்கான வகுப்புக்களை ஆரம்பிக்காது இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
இது தொடர்பில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளுடனான வியாபார உத்தரவுப்பத்திரத்தின்பால் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவதோடு தவறும் பட்சத்தில் மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் தங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என்பதையும் மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்- என்று கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
-பாறுக் ஷிஹான்-