கொள்ளுப்பிட்டியில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை திருடி அதன் இயந்திரத்தை பாகங்களாக மாற்றி விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் சுஜித் ரூபசிங்கவிற்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் 10,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த தீர்ப்பை வழங்கினார்.
கொழும்பு, கொள்ளுப்பட்டியில் வீடொன்றுடன் கூடிய காணியை உரிமையாளர்கள் வெளிநாட்டில் இருந்தபோது போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்தமை, வீட்டில் இருந்த காரை திருடியது, வீட்டிலிருந்த தங்கத்தை திருடியது உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி வழங்கினார்.
எவ்வாறாயினும், வாகனம் ஒன்றை திருடியமை தவிர ஏனைய ஐந்து குற்றச்சாட்டுக்களை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசுத் தரப்பு தவறியுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டினார்.
ஐந்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். வாகனத்தை திருடிய குற்றத்திற்காக மட்டுமே அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் ஆஜரானார்.