Pagetamil
இந்தியா

இந்தியாவில் ரயில் விபத்து: உயிரிழப்பு 207 ஆக அதிகரிப்பு; 900க்கு மேற்பட்டோர் காயம்

ஒடிசா ரயில் விபத்தில் 207 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இரண்டு பயணிகள் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய விபத்து ஒடிசாவில் நேற்று நடந்தது. ஒரு ரயில் தடம் புரண்ட மற்றொரு பெட்டியின் மீது மோதியதால் பல பெட்டிகள் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 207 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக ஒடிசா மாநில தலைமைச்செயலாளர் அறிவித்துள்ளார்.

நடந்தது என்ன?

பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து நடந்தது. முதற்கட்ட தகவல்களின்படி, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்ததால், நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ரயில்வே தரப்பில் சொல்லப்படுகிறது. இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்தது எப்படி என்பது தொடர்பான விசாரணையை ரயில்வே தொடங்கியுள்ளது. மனித தவறுகள் காரணமாகவோ அல்லது சிக்னல் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதா என்பதை அறிய ரயில்வே முயற்சித்து வருகிறது.

இந்த இரண்டு ரயில்களும் விபத்துக்குள்ளான நிலையில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயிலும் மூன்றாவது ரயிலாக அங்கு விபத்துக்குள்ளானது என்று தெரியவந்துள்ளது. யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயில், கோரமண்டல் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகளின் தடம் புரண்ட பெட்டிகளில் மோதி விபத்துக்குள்ளாகி எதிர் பாதையில் விழுந்ததாக ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார்.

சரக்கு ரயில் உடன் ஷாலிமார் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நேருக்கு நேர் மோதியதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 7 – 8 பெட்டிகள் தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன. சிறிது நேரத்தில் இதே எதிர் தண்டவாளத்தில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் வந்துள்ளது. அதனை நிறுத்த முடியாத நிலையில்தான் ஏற்கனவே தடம் புரண்டிருந்த கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்து ஏற்பட யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயிலின் 2 – 3 பெட்டிகள் தடம் புரண்டன. முதல்கட்ட தகவல்படி, இந்த விவரங்கள் வெளிவந்துள்ளன. ரயில்வேயின் விசாரணைக்கு பிறகே விரிவான தகவல் தெரியவரும்.

இப்படி 3 ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டதில் இதுவரை 207 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தடம் புரண்ட பெட்டிகளுக்கு அடியில் பலர் சிக்கியுள்ளனர். மேலும் உள்ளூர்வாசிகள் அவர்களை மீட்க அவசர படையினருக்கு உதவி வருகின்றனர். ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் படையின் (ODRAF) நான்கு பிரிவுகளும், 60 ஆம்புலன்ஸ்களும் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதவிர 54 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை குழு, விமானப்படையினர் என மொத்தம் 600 பேர் மீட்புப் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர் என்று ஒடிசா தலைமைச்செயலாளர் கூறியுள்ளார். எனினும் இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

தமிழர்கள் அதிகம் பயணிக்க வாய்ப்பு?

விபத்துக்குள்ளான இரண்டு பயணிகள் ரயிலும் தமிழகம் வழியாக செல்லக்கூடிய ரயில்கள் என்பதால் தமிழர்கள் அதிகம் பயணிக்க வாய்ப்புள்ளது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் மட்டும் 800 பேர் சென்னை வர முன்பதிவு செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இதனால் தமிழர்கள் அதிகம் பாதிப்படையவும் வாய்ப்புள்ள அச்சம் நிலவி வருகிறது.

மீட்புப் பணிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய தயார் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அமைச்சர்கள் சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின் இன்று காலை ஒடிசா செல்கின்றனர். அவர்களுடன் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மூவரும் செல்ல உள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

நெரிசலில் உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ‘புஷ்பா’ படக்குழு சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி

Pagetamil

“என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்வேன், செருப்பு அணிய மாட்டேன்!” – அண்ணாமலை கொந்தளிப்பு

Pagetamil

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல் சம்பவம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Pagetamil

3 கணவர்களிடமும் இயற்கைக்கு மாறான உறவு குற்றச்சாட்டு: பெண் கைது!

Pagetamil

Leave a Comment