பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். பட்டியலினத்தை சேர்ந்தவர். இவர் தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்து வேறு சமூக பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 23.6.2015-ல் பேசிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு, உடல் வேறாக கோகுல்ராஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது.
வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததால் கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் ஓட்டுநர் அருண் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனை, குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனை, பிரிவு, கிரிதர் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை மற்றும் மற்றொரு பிரிவிற்கு 5 ஆண்டு கடுங்காவல், சந்திரசேகரன் என்பவருக்கு ஒரு ஆயுள் தண்டனை வழங்கியது. 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
யுவராஜ் உட்பட 10 பேரும் தண்டனையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து, அவர்களுக்கு தண்டனை வழங்கக் கோரி கோகுல்ராஜ் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ்சாட்சியம் அளித்ததால், நீதிபதிகள் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்துள்ளனர்.
இந்த மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்த தீர்ப்பில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளது. இந்த வழக்கில் மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்த பிழையும் இல்லை. எனவே, யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்யப்படுகிறது. பிரபு மற்றும் கிரிதர் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் 5 பேரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவும் சரியே என்று தீர்ப்பளித்துள்ளது.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
♦இந்த வழக்கில், கொலைக்கு உள்நோக்கம் இல்லை என்றாலும் கொலைக்கு சாதிதான் காரணம் என்பது நிரூபணமாகியுள்ளது.
♦ விசாரணை நீதிமன்றம் அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்துதான் தண்டனை வழங்கியுள்ளது.
♦ அரசு தரப்பிலும் சாட்சிகளை முழுமையாக விசாரணை செய்துள்ளனர். எனவே விசாரணை நீதிமன்ற தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை.
♦ வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கபட்டுள்ளன.
♦ வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜ், அவரின் ஓட்டுநர் அருண், குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், ஆகிய 8 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது.
♦ வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜ் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும். நன்னடத்தை அடிப்படையில் அவர் முன்விடுதலை கோர முடியாது.
♦ இந்த வழக்கில், விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்த பிரபு, கிரிதார் ஆகியோருக்கு அந்த தண்டனை 5 ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது.
♦ விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.
♦ சங்கர், அருள் செந்தில், செல்வக்குமார், தங்கதுரை, சுரோன் ஆகியோரை விடுதலை செய்த விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கோகுல்ராஜ் தாயர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுகள் தள்ளுபடி செய்யப்படுகிறது.
♦ இதுபோன்ற வழக்குகளின் காவல் துறை விசாரணையை ஊடகங்கள் பரபரப்பாக்கக் கூடாது.
♦ கருத்து சுதந்திரத்தின் கட்டுப்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். யுவராஜ் ஊடகங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளார்.
அற்புதமான தீர்ப்பு
உயர் நீதிமன்ற வளாகத்தில் கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர் மோகன் கூறியது: “இந்த வழக்கில் வழக்கறிஞர் சங்கரசுப்பு தாக்கல் செய்த மனுவில், உடற்கூராய்வில் மூன்றாவது நபராக மருத்துவ நிபுணர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதன் அடிப்படையில், ராமச்சந்திரா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவரான சம்பத்குமார் தாக்கல் செய்த உடற்கூராய்வு அறிக்கைதான் கோகுல்ராஜ் தற்கொலை செய்துகொள்ளவில்லை. கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய யுவராஜ் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் அனைவரும் தங்களது செல்போன்களை அணைத்து வைத்துவிட்டு வேறு செல்போன்களையும், வாகனங்களையும் பயன்படுத்தினர். இந்த பத்து பேரும், சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தனர். அந்த சிசிடிவி பதிவுகள் தடயவியல் துறைக்கு அனுப்பி நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தனியார் தொலைக்காட்சி ஒன்றில், தானாக கலந்துகொண்டு பேட்டி கொடுத்த யுவராஜ், திருச்செங்கோடு அர்த்தநாரீசுவர் கோயிலுக்குச் சென்றதையும், அங்கு கோகுல்ராஜ் மற்றும் சுவாதியையும் சந்தித்ததையும், அவர்களின் செல்போனை பறித்துக்கொண்டதையும் அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
எங்களது மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும்கூட, இந்த வழக்கில் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டுள்ள, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எனவே, இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. தொடர்ந்து நடந்துகொண்டிருக்கக்கூடிய சாதி ஆணவ படுகொலைகளுக்கு சட்டத்தின் முன் தண்டனை கிடைக்கும் என்பதற்கு நீதிமன்றம் ஓர் அற்புதமான தீர்ப்பை அளித்திருக்கிறது” என்று அவர் கூறினார்.
கேள்விகளை அடுக்கிய தாய்
கோல்ராஜின் தாய் சித்ரா கூறியது: “என் மகன் திருடவில்லை, கொலை செய்யவில்லை, எந்தப் பெண்ணையும் ஏமாற்றவில்லை, ஒரு பாவமும் அறியாதவன். என் கணவர் இறந்த நிலையில், அவனுக்கு சின்ன வயதுதான். என் மகன்கள் இருவரையும் ஆங்கில வழியில்தான் படிக்கவைத்தேன். இருவரையும் ஆளாக்கி அழகு பார்க்க வேண்டும் என்று வளர்த்து வந்தேன்.
அமைதியாகத்தான் பேசுவான் என் மகன். அப்படிப்பட்டவனை அழைத்துச் சென்று, இந்த விஷயத்தில் யாரெல்லாம் துணை இருந்தார்களோ அவர்களுக்கும் தண்டனை நிச்சயமாக கிடைக்கும். அந்த தண்டனையை அர்த்தநாரீசுவரன் கொடுப்பார். ஒருபாவமும் செய்யாத எனது மகனை சித்ரவதைக்கு ஆளாக்கி, என் மகனின் தலையைத் துண்டித்துள்ளனர். என் மகன் அப்படி என்ன தப்பு செய்தான்? எவ்வளவோ கொடூரமான தவறு செய்தவர்களையெல்லாம் விட்டுவிட்டு, எதுவும் அறியாத பச்சை மண்ணை ஆள்வைத்து கொன்றுள்ளனர். அப்படி என்ன அவன் மீது வெறி? அவன் என்ன தவறு செய்தான்?
நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்ததற்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ரமேஷ் ஆகியோருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வழக்கில், உதவிய விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் அவரது கட்சியினருக்கும், வழக்கில் போராடி இந்த தீர்ப்பு வாங்கித் தந்த வழக்கறிஞர்கள் மோகன், சங்கரசுப்பு மற்றும் அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கு கடந்து வந்த பாதை
♦ கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி பள்ளிபாளையம் அடுத்த கிழக்கு தொட்டிபாளையம் ரயில் பாதையில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
♦ இந்த வழக்கில் சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் எஸ்.யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் (எ) சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்ற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஷ்குமார்,சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 பேரை நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்.
♦ கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை அதிகாரியாக இருந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி அவரது முகாம் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
♦ இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜோதிமணி (40) என்பவர் சொத்துப் பிரச்னை காரணமாக தனது கணவர் சந்திரசேகர் என்பவரால் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
♦ வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட யுவராஜுக்கு கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
♦ யுவராஜுக்கு ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யுவராஜ் சென்னையில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
♦ இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை 18 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதுவரை எந்த நீதிமன்றமும் யுவராஜுக்கு பிணை வழங்கக் கூடாது எனவும் உத்தரவிட்டது.
♦ கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவரது தாய், சகோதரர், தோழி என மொத்தம் 110 பேர் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டு, அவர்களிடம் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி விசாரணை தொடங்கியது.
♦ இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோகுல்ராஜின் தாயார் சித்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு வழக்கு விசாரணை மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
♦ பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 2022 மார்ச் 5-ம் தேதி தீர்ப்பளித்துள்ளது. மேலும் இவர்களுக்கான தண்டனை விவரங்கள் மார்ச் 8-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியிருந்தது.
♦ கோகுல்ராஜ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான யுவராஜ் மற்றும் அவரது கார் ஓட்டுநரான அருணுக்கு மூன்று ஆயுள் தண்டனை அதாவது சாகும்வரை சிறை தண்டனை விதித்து, மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் 2022 மார்ச் 8-ல் தீர்ப்பளித்தார். மேலும், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரவி, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு தலா 2 ஆயுள் தண்டனையும், பிரபு, கிரிதருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், சந்திரசேகரனுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
♦ இன்று – ஜூன் 2, 2023: பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.