12 வயது சிறுவன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் தம்புள்ளை முன்னாள் மேயரின் சகோதரர் நேற்று (30) தம்புள்ளை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்ததையடுத்து கடந்த 29 ஆம் திகதி சம்பவம் தொடர்பில் தம்புள்ளை தலைமையக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் தம்புள்ளை தலைமையக பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் 50 வயதுடைய சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கடந்த வருடம் பல சந்தர்ப்பங்களில் இந்த சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அறிவித்தலின் பிரகாரம், தம்புள்ளை தலைமையக பொலிஸார் சந்தேகநபரை கைது செய்வதற்காக கடந்த சில தினங்களாக அவரது வீடு மற்றும் பணியிடங்களுக்குச் சென்றும் அவரைக் கைது செய்ய முடியவில்லை.
சமூக ஊடகங்கள் ஊடாக சந்தேக நபர் தொடர்பில் தகவல் பரப்பப்பட்டதை அடுத்து சந்தேக நபர் பொலிஸில் வந்து சரணடைந்துள்ளார்.
தம்புள்ளை பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினர் 12 வயது சிறுவனிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இதேபோன்ற சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.