கிழக்கு மாகாணத்தில் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு உட்பட்ட காணிகளில் கஞ்சா பயிரிடப்படுவதாக தனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த அமைப்புகளின் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களை மட்டும் தண்டிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றும் ஆளுநர் கூறினார்.
எவ்வாறாயினும், குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அரச நிறுவனங்களின் பெயர்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
“கிழக்கு மாகாணத்தில் அரச காணிகளில் கஞ்சா பயிரிடப்படுவதாக எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த புகார்களை நான் பரிசீலிப்பேன். அதன்பின், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
கிழக்கு ஆளுநராக தாம் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே தம்மை தெரிவு செய்ததாக தெரிவித்தார்.
“எனக்கு தெரியாது. எதற்காக என்னை நியமித்தார்கள் என்று ஜனாதிபதியிடம் கேட்க வேண்டும்,” என்றார்.
முன்னாள் ஆளுனர் அனுராதா யஹம்பத் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு சீனத் திட்டங்களைத் தொடர்வாரா என்ற கேள்விக்கு, ளிவிவகார அமைச்சு மாத்திரமே தீர்மானிக்கும் என்றார்.
“வெளியுறவுக் கொள்கை அமைச்சினால் தீர்மானிக்கப்படுகிறது. அதன் உத்தரவுப்படி மட்டுமே செயல்படுவேன்,” என்றார்.