வீதி விபத்துகளை தடுக்க யாழ் மாவட்டத்தில் நாளை முதல் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் மஞ்சுளசெனரத்தெரிவித்தார்
யாழ் குடா நாட்டில் அதிகரித்துள்ள விதி விபத்துக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்,
யாழ்ப்பாண குடாநாட்டில் மே மாதம் மாத்திரம் 10ற்கும் மேற்பட்ட வீதி விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ள்ளதோடு வீதி விபத்துகளில் 10 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் விசேட நடவடிக்கை ஒன்று நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளைய தினம் முதல் யாழ்ப்பாண குடா நாட்டில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரை உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு இன்றைய தினம் அறிவுறுத்தியுள்ளேன்.
அத்தோடு வீதி விபத்துக்கள் ஏற்படக்கூடியவாறு மஞ்சள் கடவைக்கு அண்மையில் வாகனங்களை நிறுத்துதல், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துதல், வேகமாக வாகனங்களை செலுத்துதல், தலைக்கவசம் இன்றி வாகனம் செலுத்துதல் போன்ற பல்வேறுபட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக நாளைய தினம் முதல் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அத்தோடு யாழ்மாவட்டத்தில் 80 வீதமானவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியே தமது வழமையான செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள். குறிப்பாக தலைக்கவசம் அணியாது செல்கின்றார்கள். வேகமாக பயணிக்கின்றார்கள். நகரப்புறங்களிலும் வேகமாக வாகனங்களை செலுத்துகின்றார்கள். வீதிகளில் விபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய வாறு வாகனங்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
எனவே நாளைய தினம் முதல் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் போக்குவரத்து பொலிசாரை போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிபுரிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்நகரப் பகுதியில் காங்கேசன்துறை வீதி மற்றும் ஆஸ்பத்திரி வீதி பகுதியில் வீதி விபத்துகள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதால் அந்த பகுதிகள் விசேட பொலிஸ் அணியினரால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விசேட வேலை திட்டம் ஒன்றும் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எனவே பொதுமக்கள் இந்த விடயத்திற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். அத்தோடு பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து செயற்படுவதன் மூலம் வீதி விபத்துகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.